மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டது. மும்பையில் பட்டதாரிகள் தொகுதி மற்றும் ஆசிரியர் தொகுதி இரண்டிலும் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடி சார்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போட்டியிட்டது.
மும்பை பட்டதாரிகள் தொகுதியில் அனில் பரப் உத்தவ் தாக்கரே கட்சியிலிருந்து போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க தரப்பில் கிரன் ஷெலார் போட்டியிட்டார். இதில் அனில் பரப் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போன்று ஆசிரியர்கள் தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பாக போட்டியிட்ட அப்யான்கர் பா.ஜ.க வேட்பாளர் சிவ்நாத் தராடேயை தோற்கடித்தார்.
கொங்கன் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ரமேஷ் கீர் என்பவரை பா.ஜ.க வேட்பாளர் நிரஞ்சன் தேவ்காரே தோற்கடித்து வெற்றி பெற்றார். நாசிக் ஆசிரியர் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. காலையில் ஓட்டு எண்ண ஆரம்பித்த போது ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் கள்ள ஓட்டுப்போடப்பட்டதாக உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் சந்தீப் குற்றம் சாட்டினார். இங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக போட்டியிட்ட கிஷோர் தராடே முன்னிலையில் இருந்தார். எனினும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மும்பையில் ஏற்கனவே மக்களவை தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சி 3 தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இப்போது சட்டமேலவைத்தேர்தலிலும் தனது செல்வாக்கை நிரூபித்து இருக்கிறார்.
மும்பை சட்டமேலவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க களத்தில் இறக்கி வேலை செய்தது. ஆனாலும் பா.ஜ.கவால் அத்தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இத்தோல்வி பா.ஜ.கவிற்கு பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது. அதே சமயம் உத்தவ் தாக்கரேயிக்கு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தற்போது நடந்துள்ள தேர்தல் உற்சாகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. அதோடு இத்தேர்தல் முடிவுகள் வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க இரு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் மும்பை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சட்டமன்ற தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா(ஷிண்டே)வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
வரும் 12ம் தேதி 11 சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க 5 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. மக்களவை தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பங்கஜா முண்டேயிக்கு சட்டமேலவை தேர்தலில் பா.ஜ.க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து சாதியினருக்கும் இத்தேர்தலில் பா.ஜ.க வாய்ப்பு கொடுத்திருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பாக உத்தவ் தாக்கரேயின் உதவியாளர் மிலிந்த் நர்வேகருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக பிரத்யா சாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். !
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88