ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, பொது மேடையில் வைத்து முன்னாள் ஆளுநர் தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பிறகு, டெல்லியில் அமித் ஷா – தமிழிசை சந்திப்பு நிகழ்ந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று, அங்கு சுமார் 4 மாதங்களுக்கு மேல் கல்வி சார்ந்த விஷயங்களுக்காக தங்கியிருக்கப் போகிறார் என்று சொல்லப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் முக்கியப் பொறுப்புகளை கவனிப்பது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதன் பின்னணியிலும் டெல்லியில் அமித் ஷா – தமிழிசை சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க ஜெயிக்கவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி நீடித்திருந்தால், பல தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம் என்ற கருத்து, அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் பலரிடம் இருக்கிறது. இதன் பின்னணியில்தான் அண்ணாமலையை தமிழிசை வெளிப்படையாக விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து, ‘உள்கட்சி விவாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது’ என்று தமிழிசையின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த திருச்சி சூர்யா. இந்த விவகாரம் பா.ஜ.க வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது.
அந்தச் சூழலில்தான், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில், தமிழிசையை அமித் ஷா பொதுவெளியில் கண்டித்தார் என்ற சர்ச்சை எழுந்தது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பிறகு, தமிழிசையை அவரின் வீட்டுக்குச் சென்று அண்ணாமலை சந்தித்தார் என்றாலும், இருவரிடையிலான உள்கட்சி மோதல் முடிவுக்கு வரவில்லை என்கிறது கமலாலய வட்டாரம்.
இந்த நிலையில்தான், டெல்லியில் அமித் ஷா . தமிழிசை சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசியல், தமிழக பா.ஜ.க விவகாரங்கள் குறித்து தமிழிசையிடம் அமித் ஷா கேட்டறிந்தார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து பா.ஜ.க-வின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “அண்ணாமலை லண்டனுக்குச் சென்று அங்கு சில மாதங்கள் தங்கவிருக்கிறார். அந்த நேரத்தில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் முக்கியப் பொறுப்புகளைக் கவனிப்பது யார் என்ற கேள்வி கட்சி நிர்வாகிகளிடம் எழுந்திருக்கிறது.
டெல்லியில் அமித் ஷாவை தமிழிசை சந்தித்தபோது, இது பற்றி பேசப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழக பா.ஜ.க-வின் முக்கியப் பொறுப்புகளை தமிழிசை வசம் ஒப்படைப்பது குறித்து அமித் ஷா பேசியிருக்கிறார்” என்றார்கள்.
மேலும், “அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்தும் அமித் ஷாவிடம் தமிழிசை பேசியிருப்பதாக தெரிகிறது. மேலும், மக்களவைத் தேர்தலின்போது, டெல்லி மேலிடம் தேர்தலுக்காக கொடுத்த நிதியை பல நிர்வாகிகள் முறையாக செலவிடவில்லை என்ற புகாரையும் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.” என்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர்.
அண்ணாமலையில் லண்டன் பயண திட்டமும், அமித் ஷாவுடனான தமிழிசை சந்திப்பும் தமிழக பாஜகவுக்குள் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88