`எம்.பி-க்களின் மைக்-ஐ அணைக்க என்னிடம் ரிமோட் கன்ட்ரோலா?’ – சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முக்கியமான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போதும், அளிக்கப்பட்ட நேரத்தை விடவும் கூடுதலாகக் கொஞ்சம் பேசும்போதும் சபாநாயகர் மைக்கை அணைப்பதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே இருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட, ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக பதவியேற்ற முதல்நாளே, திருமாவளவன் பேசுகையில் மைக்கை அணைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

நாடாளுமன்றம்

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் விவகாரத்தில் பேசுகையில் மைக் அணைக்கப்பட்டதாகக் காங்கிரஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டது. அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய ஓம் பிர்லா, மைக்கை அணைக்க என்னிடம் ஸ்விட்ச் எதுவும் இல்லை என்றும், முன்பு அவ்வாறு இருந்தது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சபாநாயகர் இருக்கையில் எம்.பி-க்களின் மைக்கை அணைப்பதற்கான ரிமோட் கன்ட்ரோலோ, ஸ்விட்ச்சோ தன்னிடம் இல்லை என ஓம் பிர்லா மீண்டும் விளக்கமளித்திருக்கிறார்.

இது குறித்து ஓம் பிர்லா இன்று பேசுகையில், “இந்த நாற்காலியில் இருப்பவர் மைக்கை அணைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம். இதுதொடர்பாக அவை கலந்துரையாட வேண்டும்.

ஓம் பிர்லா

சபாநாயகர் நாற்காலியில் இருப்பவர் உத்தரவுகளை மட்டும்தான் பிறப்பிக்க முடியும். யாருடைய பெயர் அழைக்கப்படுகிறதோ அந்த உறுப்பினர் சபையில் பேசலாம். தலைவரின் உத்தரவுப்படி மைக் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், நாற்காலியில் அமர்ந்திருப்பவருக்கு ரிமோட் கன்ட்ரோல் அல்லது மைக்குகளுக்கான ஸ்விட்ச் இல்லை. இது, இந்த நாற்காலியிலிருப்பவரின் கண்ணியம் சார்ந்த விஷயம்” என்று ஓம் பிர்லா கூறியிருக்கிறார்.