அணு ஆயுத ஏவுகணை சோதனைகள், ராட்சத பலூன்களை தங்களின் எதிரி நாடுகளுக்கு அனுப்புவது, கடுமையான தண்டனைகளை வழங்குவது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்த்த நாடு வட கொரியா. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதேபோல் அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசும் உள்நாட்டு மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க தவறியதில்லை. கடந்த ஆண்டுகூட, வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இலின் பத்தாவது நினைவு தினத்தில், 11 நாள்கள் துக்க அனுசரிப்பின் ஒரு பகுதியாக, வடகொரிய குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ, மது அருந்தவோ கூடாது. மீறினால் தண்டனை எனவும் கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இச்சூழலில் வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்குமீது கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளையும் விதிக்கிறது. இந்த நிலையில், தென் கொரியாவின் K- Pop பாடல்களைக் கேட்ட 22 வயதான இளைஞரை வட கொரிய அரசு பொது வெளியில் தூக்கிலிட்டதாக தென் கொரியா அரசு பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தவறிழைத்ததாகக் கருதப்படும் 22 வயது இளைஞர், 70 தென் கொரிய கே பாப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று தென் கொரியப் படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல், அவற்றை மற்றவர்களுக்கு விநியோகம் செய்ததாகவும்… இதன்மூலம் நாட்டின் சட்ட திட்டங்களை மீறியதாகக் கூறி, அந்த இளைஞனைக் குற்றவாளி எனக் கருதி அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், 2022-ம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவம், தற்போது தென் கொரியா வெளியிட்ட ‘வட கொரியாவின் மனித உரிமைகள் – 2024’ என்ற அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“2020-ல் நிறைவேற்றப்பட்ட பிற்போக்குத்தனமான, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான தண்டனைகளை வழங்கி மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறச்செய்யாமல் வட கொரியா செய்து கொண்டிருக்கிறது. மேலும், அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டங்களை இயற்றி, வெளிநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, அப்படி வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றுபவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கின்றனர்.
மேற்கூறிய செயல்பாடுகளின் மூலம் வெளிநாட்டு கலாசார தாக்கங்களைக் குறைக்க இயலும் என்றும், கலாசார நுகர்வு, நாட்டின் கலாசாரத்தை பராமரிக்க வேண்டும் என்கிற நோக்கமே இத்தகைய கட்டுப்பாடுகளுக்குக் காரணம்” என வட கொரியா மீது குற்றம்சாட்டப்படுகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு வட கொரியாவில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவது, மணமகன்கள் மணப்பெண்களை தோலில் சுமந்து செல்வது, சன்கிளாஸ் அணிவது மற்றும் மதுவைக் கண்ணாடிக் குடுவையில் வைத்து அருந்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியாகி, கலாசாரச் சட்டங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிப்படுத்தியதோடு, உலக அளவில் பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.