மேற்கு வங்கத்தின் லக்ஷ்மிகாந்தபூர் கிராமத்தில் ஆண், பெண் இருவரை சாலையில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஒருவர் பிரம்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவிய நிலையில், தாக்கிய நபர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமானவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், தாக்கப்பட்ட ஆணும், பெண்ணும் திருமணம் மீறிய உறவில் இருந்ததால் கிராமத்தினர் இத்தகைய தண்டனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, “மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியின் மோசமான முகம் இதுதான். வீடியோவில் பெண்ணை இரக்கமின்றி தாக்கும் நபர் ஜே.சி.பி என்றழைக்கப்படும் தஜேமுல். இவர், ‘இன்சாப்’ சபா மூலம் விரைவான நீதி வழங்குவதில் பிரபலமானவர். குறிப்பாக, சோப்ரா தொகுதி எம்.எல்.ஏ ஹமிதுல் ரஹ்மானின் நெருங்கிய கூட்டாளி இவர். பெண்களுக்கு மம்தா சாபமாக இருக்கிறார். மம்தா பானர்ஜி இந்த அரக்கனுக்கு எதிராகச் செயல்படுவாரா அல்லது ஷேக் ஷாஜகானுக்கு (சந்தேஷ்காளி சம்பவம்) ஆதரவாக நின்றது போல் அவரை பாதுகாப்பாரா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
பின்னர், தாக்கியவருடனான தொடர்பை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுல் ரஹ்மான், “இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அந்தப் பெண்ணும் தவறு செய்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவன், மகன், மகளை விட்டுப் பிரிந்து கெட்ட மிருகமாகிவிட்டார். முஸ்லிம் சமுதாயத்தின்படி சில நெறிமுறைகளும் நியாயங்களும் உள்ளன. இருந்தாலும், நடந்தது சற்று தீவிரமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இருப்பினும், மத்திய அமைச்சரும், பா.ஜ.க மாநில தலைவருமான சுகந்தா மஜும்தார், “ ஹமிதுல் ரஹ்மான், முஸ்லிம் ராஷ்டிராவைக் குறிப்பிட்டு சில விதிகளின் கீழ் தண்டனைகளைப் பற்றி சொல்வது கவலையளிக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் ஷரியா சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கிறதா?” எனக் கேள்வியெழுப்பினார்
இதற்கிடையில், வீடியோ வைரலானதால் போலீஸார் அந்த நபரைக் கைதுசெய்தனர். இதுகுறித்து, இஸ்லாம்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜோபி தாமஸ்.கே, “சமூக வலைதளங்களில் வீடியோவைப் பார்த்த பிறகு, போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். குற்றவாளியைக் கைது செய்துவிட்டோம். இந்தச் செயலுக்கான காரணத்தை உடனடியாக விசாரிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.