`முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்!’ – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த கிராம ஊராட்சியில், மாற்றுச் சமூகத்தினரின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளால், பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பல முறை அந்த கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

மேலவளவு

பின்னர், 1996-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேலவளவு கிராமத்தில் அப்போதைய காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான முருகேசனும், அவரது தம்பி ராஜா உட்படப் பலர் கிராம ஊராட்சியில் உள்ள தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற்றதற்குப் பிறகு முருகேசன், அவரது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க தலைவரும்,எம்.பி-யுமான திருமாவளவன், “நான் கட்சி தொடங்கியபோது, என் தோழர்களிடம் என்னுடன் பயணித்தால் பூமாலை கிடைக்கும் என நினைக்க வேண்டாம். கைவிலங்குக்கும் தயாராக வேண்டும் என அறிவித்தேன். அப்போது எனக்கு வயது 27 வயது. முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதலமைச்சர் நான்தான் என அறிவித்து கொள்கின்றனர்.

திருமாவளவன் – ஸ்டாலின்

ஆனால் நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். மக்களை அரசியல் படுத்துவதுதான் என் கொள்கை. மேலவளவு படுகொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு பொறுப்புகள் இருந்தன. அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக அதை மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் அங்கீகாரம் பெற்ற இயக்கமான வி.சி.க 4 எம்.எல்.ஏ, 2 எம்.பி என தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது.” எனப் பேசினார்.

அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரை அதிகரித்து ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்வோம். கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முழு மதுவிலக்கு ஒன்றுதான் தீர்வு. நச்சு சாராயம் அருந்தி உயிரிழப்பவர்களைவிட அரசு மதுபானம் மனித வளத்தை பெருமளவு சேதப்படுத்துகிறது.

கள்ளச்சாராய பாதிப்புகள்

இதனால் ஏற்படும் பாதிப்பை கவனத்தில் கொண்டு, மதுவிலக்கை மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் பரிசீலிக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால் தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும். காந்தியடிகள் கள்ளு உட்பட எந்த மதுவும் கூடாது என்றுதான் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் முழு மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்துவது தான் காந்திக்கு செலுத்துகிற நன்றி கடனாக இருக்க முடியும்.

கள்ளுக்கடையை திறக்கவேண்டுமென தமிழ்நாட்டில் கள்ளு உற்பத்தியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. முதலில் மதுமான கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். அதுதான் முதன்மையான கோரிக்கை. மெத்தனால் மாஃபியா கும்பலை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால் மக்கள் மதுபானக்கடையை மூட சொல்கிறார்கள்.

டாஸ்மாக்

எனவே, அரசு மதுபானக் கடைகளை படிபடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும் மது ஒழிப்பு மாநாடு வி.சி.க சார்பில் நடத்தப்பட உள்ளது. குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. தனிப்பெரும்பான்மை இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது.

ஆனால், குடியரசு தலைவர் உண்மைக்கு மாறாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, ஒரு சார்பாகவே நடந்து கொள்கிறார். சிறந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி செயல்படும் என நம்புகிறோம். நடிகர் விஜய்யின் கருத்தில் உள்நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை. சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்கொடுமையை தடுக்க தனி உளவுப் பிரிவை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.