Chandrachud: `நீதிமன்றத்தை கோயிலென்றும், நீதிபதியை கடவுளென்றும் கருதுவது ஆபத்தானது!’- CJI சந்திரசூட்

தேர்தல் பத்திரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பின் மூலம் பரவலாகக் கவனம் பெற்ற இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றத்தைக் கோயிலுடனும், நீதிபதியை கடவுளுடனும் ஒப்பிடுவது ஆபத்தானது என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, தேசிய நீதித்துறை அகாடமியின் கிழக்கு மண்டலம்-II பிராந்திய மாநாடு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மம்தா – சந்திரசூட்

இதில் உரையாற்றிய சந்திரசூட், “அடிக்கடி நாங்கள், `மரியாதைக்குரிய’, `லார்ட்’ என்று அழைக்கப்படுகிறோம். நீதிமன்றத்தை நீதியின் கோயில் என்று மக்கள் கூறுவது மிகவும் ஆபத்தானது. மேலும், அத்தகைய கோயில்களில் உள்ள தெய்வங்களாக நம்மை நாம் உணர்ந்துகொள்வது மிகப்பெரிய ஆபத்து.

மக்கள் சேவையாளராக நீதிபதியின் பங்கை நான் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன். மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களாக உங்களை நீங்கள் கருதும் போது, இரக்கம், அனுதாபம் போன்ற கருத்தை கொண்டு வருகிறீர்கள். கிரிமினல் வழக்கில் தண்டனை வழங்கும்போது கூட, நீதிபதிகள் கருணை உணர்வுடன் அதைச் செய்கிறார்கள். ஏனெனில், இறுதியில் அங்கு ஒரு மனிதனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

சந்திரசூட்

அரசியலமைப்பு அறநெறி பற்றிய இந்த கருத்துகள், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மாவட்ட நீதித்துறைக்கும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், சாதாரண குடிமக்களின் ஈடுபாடு முதலில் மாவட்ட நீதித்துறையிலிருந்து தொடங்குகிறது” என்றார்.