`ஆயுள் தண்டனை… ரூ.10 லட்சம் வரை அபராதம்!’ – சட்டப்பேரவையில் நிறைவேறிய மதுவிலக்கு திருத்த மசோதா

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டே கள்ளச்சாராயத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 65 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளச்சாராய உயிர் பலிகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால், திமுக அரசின் ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. கூடவே, சிபிஐ விசாரணையையும் எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

கள்ளச்சாராயம்

இவ்வாறிருக்க, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையைக் கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் முத்துசாமி, 1937 தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். இந்த திருத்த மசோதாவானது, நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி அளிக்கப்படும் சிறைத்தண்டனையை நீட்டித்தும், விதிக்கப்படும் அபராதத்தொகையை அதிகரித்தும் திருத்தும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதன்படி, கள்ளச்சாராயம், போதைப்பொருள் போன்றவற்றைத் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைமீறி இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் வரையில் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதோடு, இத்தகைய செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி சீல் வைத்தால் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்த மசோதா அனுமதிக்கிறது.

அமைச்சர் முத்துசாமி

இதுமட்டுமல்லாமல், இத்தகைய குற்றங்களைச் செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறான, அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திருத்த மசோதா இறுதியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88