திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?! – ஒரு பார்வை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும், அந்தச் சம்பவம் தி.மு.க அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே போராட்டத்தில் இறங்கின.

கள்ளச்சாராயம்

இந்த நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை தமிழக அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

அப்போது அவர், “கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையைக் கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அமைச்சர் முத்துசாமி

கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். படிப்படியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். இந்த நடவடிக்கைகள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும்’ என்றார் அமைச்சர் முத்துசாமி.

முன்னதாக நேற்று, உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஸ்டாலின்

என்னைப் பொருத்தளவில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனைசெய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியிருந்தார்.

தமிழக அரசின் மதுவிலக்குத் திருத்தச் சட்டம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியூ) மாநில பொதுச்செயலாளர் க.திருச்செல்வனிடம் பேசினோம்.

“மதுவிலக்கு சட்டத் திருத்தம் 2024 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுதல், கள்ளத்தனமாக விற்பனை செய்தல் தொடர்பாக ஏற்கெனவே சட்டத்தில் தண்டனை அபராதத் தொகை இருக்கிறது. இப்போது, இதில் தண்டனை காலத்தையும் அபராதத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

திருச்செல்வன்

சட்டங்களைக் கடுமையாக்கி இருப்பதெல்லாம் சரிதான். ஆனால், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகளை தமிழக அரசு எப்படி சரிசெய்யப்போகிறது என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே மதுவிலக்குச் சட்டம் அமலில் இருக்கிறது. அதை சரியாக அமல்படுத்தவில்லை என்பது மரக்காணம், கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்களிலிருந்து தெரியவந்திருக்கிறது.

கடந்த ஆண்டு 22 பேரும் இந்த ஆண்டு 62 பேரும் கள்ளச்சாராயம் குறித்து உயிர்பலி ஆகியிருக்கிறார்கள். இது எப்படி நிகழ்ந்தது? தண்டனைக் காலத்தையும், அபராதத்தையும் அதிகரிப்பதால் மட்டுமே கள்ளச்சசாராயத்தையும், சட்டவிரோத மது விற்பனையையும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?

கள்ளக்குறிச்சி மரணங்கள்

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கள்ளச்சாராய வியாபாரிகள் ஆகியோருக்கு இடையிலான தொடர்பும், ஒத்துழைப்பும் இல்லாமல் கள்ளச்சாராய வியாபாரம் நடைபெறுவது இயலாத ஒன்று. எனவே, கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோன அரசியல்வாதிகள் உள்பட அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவசர கதியில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும். டாஸ்மாக் கடையை மூடுவதற்கு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால், கடையை மூடுவதில்லை. ஆனால், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

டாஸ்மாக் கடை

கிராமசபைத் தீர்மானங்களை மதித்து தமிழ்நாட்டில் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன?” என்று கேட்கும் திருச்செல்வன், ‘கள்ளச்சாராயம், டாஸ்மாக் கடைகள் தொடர்பான சட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் மதுவிலக்கு திருத்தச் சட்டத்தால் எந்தப் பலனும் இல்லாமல் போய்விடும்’ என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88