`விஜய்-க்கு தூது விடும் சீமான்..!’ – த.வெ.க ரெஸ்பான்ஸ்தான் என்ன?!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் த.வெ.க சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடத்த இந்நிகழ்ச்சியில் மைக் பிடித்த விஜய், “தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு பணி வாய்ப்பாக ஏன் வரக்கூடாது? அப்படி வர வேண்டுமென்பதே என் விருப்பம்” என்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

தொடர்ந்து தனது பேச்சை ஊடகங்களின் பக்கம் திரும்பியவர், “நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படியுங்கள். ஒரே செய்தியை வெவ்வேறு நாளிதழ்கள் வெவ்வெறு மாதிரி எழுதுவார்கள். எல்லாவற்றையும் பாருங்கள், படியுங்கள். எது உண்மை, எது பொய் என ஆராயுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத் தீமைகள் பற்றியெல்லாம் தெரிய வரும். அதைத் தெரிந்துகொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை நம்பாமல், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதைத் தெரிந்துகொண்டு, நல்ல தலைவர்களைத் தேர்வுசெய்யும் விசாலமான பார்வை வரும்” என பேசினார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், “சமீப காலத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை, ஆளும் அரசு தவறவிட்டுவிட்டார்கள் என்று பேச வரவில்லை. அதற்கான மேடையும் இதுவல்ல. சில நேரங்களில் நம் வாழ்வை நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று மறைமுகமாக தி.மு.க-வையும் சாட்டியிருந்தார். இதற்கிடையில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் ஊடகத்தினரிடம் அளித்த பேட்டியில், “விஜய்யின் பல பிரச்னைகளில் உடன் நின்றிருக்கின்றேன். கத்தி திரைப்பட பிரச்னை வந்தபோதும் அவருடன் நின்றேன். தலைவா திரைப்படத்தில் Time to lead என்ற வார்த்தைக்கு பிரச்னை வந்தபோதும் அவருடன் நின்றேன். கூட்டணிக்கான அஸ்திவாரம் என எடுத்துக் கொள்ளலாமா என கேட்டால், எடுத்துக்கொள்ளுங்கள” என்றார்.

சீமான்

இதையடுத்து, ‘சீமான் பேச்சுக்கு விஜயின் த.வெ.க ரெஸ்பான்ஸ் என்ன?’ என்கிற கேள்வியுடன் த.வெ.க செய்தித் தொடர்பாளர் வீர விக்னேஷிடம் பேசினோம், “இதை ஆரம்ப நிலை என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து சரியான முடிவை தலைவர் தளபதி எடுப்பார்” என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பிறகு த.வெ.க, நா.த.க கூட்டணி 2026 தேர்தலில் அமையுமா என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ஷியாமிடம் பேசினோம், “விஜய் கூட்டணி முயற்சியை எடுக்க வாய்ப்பு இல்லை. முதல் முறையாகக் களமிறங்குவதால் தனது வாக்கு வங்கியின் பலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். இதற்கு முன்பு 2006, 2009 தேர்தலில் விஜயகாந்த் அதைத்தான் செய்தார். ஆனால் விஜயகாந்த்தை விட விஜய்க்கு மார்க்கெட் அதிகம்.

மறுப்பக்கம் இரண்டு, இரண்டு சதவீதமாகவே சீமான் வாக்கு வங்கியை ஏற்றி வருகிறார். வெற்றி இல்லையென்றால் கட்சியினர் சோர்வடைந்து விடுவார்கள். எனவே கூட்டணி அமைக்க விரும்புகிறார். மேலும் த.வெ.க முழுமையாக தேர்தல் ஆணையத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. வேல்முருகனும் டிவிகே என்கிற பெயரில்தான் விண்ணப்பித்து இருக்கிறார். ஆகவே தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்ய போகிறது என தெரியவில்லை. 2019-ல் அ.ம.மு.க அங்கீகாரத்துக்கு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகுதான் அங்கீகாரம் கொடுத்தார்கள். அதில் பல தடைகள் ஏற்பட்டது. அதுபோல விஜய்க்கும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதை தாண்டி வருவதற்கே இவருக்கு நீண்ட காலம் ஆகும். இதுபோல் பல கட்டங்களை விஜய் இன்னும் தாண்ட வேண்டியிருக்கிறது. ஆனால் கூட்டணி வைப்பது என்ற முடிவை எடுத்தால், அ.தி.மு.க கூட்டணிக்கு சீமான் செல்வதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88