சரக்கு மற்றும் சேவை வரி முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டு, வருகிற ஜூலை 1-ம் தேதியுடன், ஏழு ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. 1991-ம் ஆண்டில் தாராளமயமக்கல் கொண்டுவரப்பட்ட பிறகு, நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றம், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதுதான்!
இந்த வரியானது நடைமுறைக்கு வந்த பின்புதான் வாங்கும் பொருள் மற்றும் சேவைக்கு உரிய வரியைக் கட்டியாக வேண்டும் என்கிற நிலை உருவாகி இருக் கிறது. இதனால் அரசுக்கு வந்து சேர வேண்டிய வரியானது சிந்தாமல் சிதறாமல் வந்து சேர வழி பிறந்திருக்கிறது. இந்த வரிமுறை நடைமுறைக்கு வராமலே போயிருந்தால், வரி கட்டாமல் இருப்பதன் மூலம் கறுப்புப் பணம் அதிக அளவில் பெருகி, நிழல் பொருளாதாரம் இன்னும் அதிக வலுவுடன் ஆட்சி செலுத்தியிருக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் மோடியும் சொன்னது போல, இந்த வரிமுறை நடைமுறைக்கு வந்தபின் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களுக்கான வரி முற்றிலுமாக நீங்கி அல்லது குறைந்து, மக்கள் சேமிக்கும் பணத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. அழகுசாதனப் பொருள்கள், துணி துவைக்கும் சோப்புகள், மொபைல் போன், எலெக்ட்ரானிக் பொருள்கள் எனப் பல பொருள்களுக்கான வரி 27% – 31% என்றிருந்தது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால், மக்களின் பணம் ஓரளவுக்கு மிச்சமாகவே செய்கிறது.
அதே சமயம், இந்த வரிமுறை மீது பல விமர்சனங்களும் இருப்பதை மறுக்க முடியாது. அதிக வரி விதிக்கப்பட்ட பொருள்கள் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசாங்கம் தயாராகவே இல்லை. தவிர, பெட்ரோல், டீசல் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலானது ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால், அதன் விலை கணிசமாகக் குறையும். இதனால் மக்கள் சேமிக்கும் பணம் அதிகரித்து, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
தற்போது ஜி.எஸ்.டி தாக்கல் செய்வதற்கான வரம்பு ரூ.40 லட்சம் டேர்ன் ஓவர் என்று இருப்பதை ரூ.1.50 கோடி என மாற்றுவதன் மூலம் பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிம்மதியாகத் தொழில் செய்வார்கள் எனத் தொழில் நிறுவனங்கள் முன்வைக்கும் கோரிக்கையும் மத்திய அரசாங்கம் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்! முக்கியமாக, ஜி.எஸ்.டி மூலம் வரும் வரி வருமானம் மாநில அரசுகளுக்கு உரிய அளவில் பிரித்துத் தரப்படுவதில்லை என்கிற பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி மூலமாக நாட்டின் வரிவருவாய் அதிகரித்திருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியே. அதேசமயம், இந்த வரி மூலமாக வதைக்கப்படும் ஜீவன்களும் இங்கே இருக்கவே செய்கின்றன. சமீபத்திய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. எனவே, ஈகோ பார்க்காமல், இந்த வரிமுறையை மேலும் செம்மைப் படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதுவே, ‘ஜி.எஸ்.டி ஏழாம் ஆண்டு கொண்டாட்ட’த்தின் முக்கிய செய்தியாக இருக்க வேண்டும்!
– ஆசிரியர்