அரசியல் சாசனத்தை ஏந்தும் காங்கிரஸ்; எமர்ஜென்சியைத் தூசுத்தட்டும் பாஜக – தாக்கம் என்ன?

இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு மக்களவைத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, 2024 மக்களவைத் தேர்தலில், அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்து தீவிரமாக பிரசாரம் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தவுடன், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இப்படியான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், ‘இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது பா.ஜ.க தரப்பு. அதைத் தொடர்ந்து, இந்துத்துவா கொள்கைகளை மோடி அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்தது. அதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்ற செய்தி பல தரப்பினரும் அதிர்ச்சியோடு எதிர்கொண்டார்கள்.

இந்தியாவில் இந்து ராஷ்டிரா கொண்டுவர வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் பேசினார். பா.ஜ.க-விலிருந்தும் அத்தகைய பேச்சுகள் வந்தன. மக்களவைத் தேர்தலின்போது, ‘400 இடங்களை ஜெயிப்பதே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத்தான்’ என்று ஒரு பா.ஜ.க பிரமுகர் வெளிப்படையாகப் பேசினார்.

மோடி

இப்படியான சூழலில்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க ஆரம்பித்தனர். ‘பா.ஜ.க மூன்றாவது முறையாக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை நிச்சயம் மாற்றிவிடுவார்கள். அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல இடங்களில் பேசினார்.

இந்தப் பின்னணியில்தான், 2024 மக்களவைத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் அரசியலமைப்புச் சட்டம் குறித்த பேச்சுகள் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் பிரசாரத்தில் இடம்பெற்றன. தேசிய அளவில் அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விவாதங்களும் எழுந்தன.

ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி-க்கள் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கையில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை ஏந்தியவாறு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்திய நிலையில்தான், அதற்கு பதிலடியாக எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்திருக்கிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். கருத்துரிமை நசுக்கப்பட்டது. இந்த விவகாரத்தை இப்போது பா.ஜ.க-வினர் நினைவுபடுத்திவருகிறார்கள்.

குடியரசுத் தலைவர் முர்மு உரை

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, 1975-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரநிலையை விமர்சித்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் எமர்ஜென்சி விவகாரம் எதிரொலித்தது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் உரையாற்றிய முர்மு, ‘1975-ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலின் கறுப்பு அத்தியாயம். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியா தோற்க வேண்டுமென்று உலகில் சில சக்திகள் விரும்பின. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதன் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றம்

1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையால் ஒட்டுமொத்த நாடும் கொதித்துப்போனது. அதே நேரத்தில், இந்தியாவின் உயிராக விளங்கும் ஜனநாயகப் பாரம்பர்யங்களால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சக்திகள் தோற்கடிக்கப்பட்டு நாடு வெற்றியடைந்தது’ என்றார் திரௌபதி முர்மு.

எமர்ஜென்சி விமர்சிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வு மோசடிகள், நெட் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிவு போன்ற பிரச்னைகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டாமா?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88