தலை துண்டித்து இளைஞர் கொலை; `ஆணவக்கொலை’ என பெற்றோர் குற்றச்சாட்டு – மதுரையில் பரபரப்பு!

காதல் விவகாரத்தில் இளைஞரின் தலையை, பெண்ணின் உறவினர், வெட்டி படுகொலை செய்த சம்பவம், விருதுநகர்-மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

இக்கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டுமென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரும், தமிழ்ப்புலிகள் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தை சேர்ந்த மாரிமுத்து – மாரியம்மாள் தம்பதியின் மகன் அழகேந்திரன், படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் நட்பாகி, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் தெரிந்து பெண்ணின் வீட்டில் கண்டித்ததாகவும், அதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் செய்ய முயன்றபோது, அது தெரிந்து பெண்ணின் உறவினர்கள் இருவரையும் பிரித்து அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் அழகர் வீட்டிற்கு சென்றுள்ளார் அழகேந்திரன். அப்போது காதலிக்கும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் ‘உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன். அதுகுறித்து பேச வேண்டும் வா’ என அழகேந்திரனிடம் போனில் தெரிவிக்க, அதை நம்பி அழகேந்திரன் சென்றுள்ளார்.

தொடர் போராட்டம்

இந்நிலையில் தன் மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காணாமல் போன அழகேந்திரன் கடைசியாக இருந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறியதால், மதுரை மாவட்டம் காவல்துறையினர் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர்.

இந்த நிலையில் 27-ம் தேதி காலை கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் அழகேந்திரன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாயாருக்கு தகவல் சொல்லப்பட்டது.

பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை போன் செய்து அழைத்து சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர். அழகேந்திரனின் உடல் உடற்கூராய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக அழகேந்திரனின் தாயாரும், அவரது உறவினர்களும், தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் 27-ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அழகேந்திரன்

பின்பு, அழகேந்திரன் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள், “கள்ளிக்குடியில் என் மகனை பிரபாகரன் என்பவன் தனியாக அழைத்துச் சென்ற நிலையில், காலையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வந்தது. என் மகன் எப்படி இறந்தான் என்பது கூட தெரியவில்லை, ஆனால் போலீஸ், இருவருக்கும் இடையே கஞ்சா குடிப்பதில் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்ததாக கூறி திசை திருப்புகிறார்கள். என் மகனுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் இல்லை. என் மகனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்றார்

அழகேந்திரன் உறவினர் போராட்டம்

தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன், “இளைஞர் அழகேந்திரன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்து, ஆணவப் படுகொலையாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை செய்ய வேண்டும்” என்றார். இரண்டாவது நாளாகவும் மதுரையில் போராட்டம் தொடர்கிறது.