“டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்புகொள்ளுங்கள்” – லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்தும் சென்று விடுகிறார்கள்.

சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்துக்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்.

“டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டுச் சென்றுவிட்டார்.

theif

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச் சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரை டிராக் செய்து சில மணிநேரத்திலேயே கண்டுபிடித்தனர். ஷாங்காயில் இருந்து புறப்படும் ரயிலில் திருடனைப் பிடித்து, திருடிய பொருள்களையும் கைப்பற்றினர். 

`திருடியதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனா, அந்த அட்வைஸ்தான்’ என இந்தச் சம்பவம் பலரிடையே கவனம் பெறத் தொடங்கியது. சிலர் `நல்ல திருடன்’ என்றும், `அலுவலகத்தில் செக்யூரிட்டி சிஸ்டத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக பிடிபடாமல் வெளியேறும் உங்களின் திறனை வளர்க்க வேண்டும்’ என்று கிண்டலடித்துள்ளனர்.