Cheppakkam: சாம்பலில் மூழ்கும் ஊர்; சென்னையில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்தின் கதை!

சென்னையில் சாம்பல் கழிவுகளால் மூழ்கும் ஒரு கிராமத்தின் சோகம் “இந்தியாவின் பிரமாண்டமான ஒரு சாம்பல் ஏரியையும், அந்த ஏரியால் வாழ்க்கையை இழந்து மீளவும் முடியாமல் வாழவும் முடியாமல் தவிக்கும் ஒரு கிராமத்தையும் காணலாம் வாருங்கள்’’ என்றொரு அழைப்பு…

அதுவும் நம் சென்னைக்கு மிக அருகில்… ஒரு நற்பகலில் கிளம்பிவிட்டோம். எண்ணூர் ரசாயனக் காற்றைச் சுவாசித்தபடி கொசஸ்தலை முகத்துவாரம் தாண்டி மீஞ்சூர் சாலைக்குள் நுழைந்து ‘‘செப்பாக்கம் எப்படிண்ணே போகணும்’’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டோம். ‘‘இதோ இந்த பைப்லைன் போகுது பாரு, அது பின்னாடியே போ… எங்கே அது முடியுதோ அதுதான் செப்பாக்கம்’’ என்று இலகுவாக வழிகாட்டினார்.

சாம்பல் ஏரி

நீண்டு, வளைந்து செல்லும் அந்த 10-க்கும் மேற்பட்ட மெகா பைப் லைன்களும் துருப்பிடித்து ஈரம் பூத்திருக்கின்றன. சில இடங்களில் உடைந்து உள்ளிருந்து வெள்ளை நிற நீர் கசிகிறது. அந்தக் குழாய்களை அடியொற்றிப் பயணித்தால் 8-வது கிலோ மீட்டரில், கருவேல மரங்களுக்கு மத்தியில் இருக்கிறது செப்பாக்கம். ஊரைச் சுற்றிலும் அனல் மின் நிலையத்தின் புகை போக்கிகளும் பிரமாண்ட கட்டுமானங்களும் இடைவிடாத எந்திரச் சத்தமும் மிரள வைக்கின்றன.

எண்ணூர் அனல் மின் நிலையங்களால் வளம் தொலைத்த கிராமம் செப்பாக்கம். ஒரு பக்கம் வேளாண்மை, இன்னொரு பக்கம் உப்பங்கழி என்று வளம் கொழித்த ஊர். இன்று அனல் மின் நிலையங்கள் கக்குகிற சாம்பலாலும் உப்பு நீராலும் பாழ்பட்டுக் கிடக்கிறது. கருவேல மரங்கள் தவிர வேறெந்தப் பச்சையும் கண்ணுக்குத் தெரியவில்லை.
சென்னைக்கு மிக அருகில் சாம்பலால் இயல்பைத் தொலைத்து இன்னலுறும் செப்பாக்கம் மக்களின் துயர வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம் கீழே..!