சேலம் ரயில் நிலையத்தில் எலக்டிரிக்கல் பிரிவு அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 80 கிலோ எடைகொண்ட காப்பர் ஒயர் திருடு போயுள்ளது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எஃப்) வழக்கு பதிவுசெய்திருந்தனர். எஸ்.ஐ கோகுல் யாதவ், குற்றப்பிரிவு எஸ்.ஐ கார்த்திக்கேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் மூலம் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சேலம் தாதம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சேர் ஆட்டோ டிரைவரான கோவிந்தராஜ், தனது கூட்டாளிகளான வாழப்பாடியைச் சேர்ந்த செல்வம், அம்மாபேட்டையைச் சேர்ந்த கனகராஜ், சங்கர், மலரவன் ஆகியோருடன் சேர்ந்து காப்பர் ஒயரைத் திருடியது தெரியவந்துள்ளது.
மேலும் திருடியவற்றை அம்மாபேட்டையைச் சேர்ந்த சதிஷ் குமார் எனும் பழைய பொருள்கள் வாங்கும் வியாபாரியிடம் விற்றுள்ளனர். அதன்மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டோரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில், பொருள்களை வாங்கிய வியாபாரி சதிஷ் குமார் காப்பர் ஒயரை வேறொருவருக்கு விற்றதால், அவரிடம் காப்பர் ஒயருக்கான தொகை 45,000 ரூபாயை விசாரணை செய்த தனிப்படையினர் வாங்கியுள்ளனர். மேலும் வாங்கிய பணத்தைக் கொண்டு ஆர்டர் போட்டு புதிதாக காப்பர் ஒயர் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். அதன்மூலம் புதிய ஒயர்கள் வாங்கப்பட்டதுடன் இதில், சம்பந்தப்பட்ட 6 பேர்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.