அதிமுக-வின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதவளித்த `நாம் தமிழர்’ கட்சி… பின்னணியில் இடைத்தேர்தல் கணக்கா?!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க கோரி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்துக்கு `நாம் தமிழர் கட்சி` ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்காணோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிகிறது. இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

சீமான் – எடப்பாடி – பிரேமலதா

சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் விவாதிக்கப்பட வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அதனை தொடர்ந்து அவர்களை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். இந்நிலையில்தான் ஜூன் 27-ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென கூறி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் அதிமுகவினர்.

எடப்பாடி பழனிசாமி – அதிமுக

அ.தி.மு.க-வின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சீமான், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுக-வினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் அறிக்கை வாயிலாக. அதோடு, நா.த.க-வின் மாநில பொறுப்பாளர்கள் ராவணன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் போராட்டத்துக்கே நேரில் சென்று ஆதரவளித்தனர்.

எடப்பாடியை சந்தித்த நா.த.க-வினர்

நம்மிடம் பேசிய விவறமறிந்தவர்கள், “ஜூலை 10-ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணித்திருக்கிறது அ.தி.மு.க. களத்தில் தி.மு.க-வையும் பா.ம.க-வையும் எதிர்த்து நிற்கும் நா.த.க அ.தி.மு.க-வின் வாக்குகளை பெற `ஸ்கெட்ச்’ போடுகிறது.

ஜூன் 25-ம் தேதி விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் பேசிய சீமான் `அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க உறவுகள் எனக்கு ஆதரவளியுங்கள், 2011 சட்டமன்ற தேர்தலிலும் மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் உங்கள் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்தேன்” என்றார். அ.தி.மு.க-வின் வாக்குகளை எதிர்பார்த்து மேடையில் பேசும் சீமான், மறுதினமே.. அ.தி.மு.க போராட்டத்துக்கு ஆதரவளித்து, நிர்வாகிகளை நேரில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவது.. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அரசியலுக்காக என்ற விமர்சனத்தை கிளப்பியுள்ளது” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் சிலர், “சீமான் செய்வது அப்பட்டமான சந்தர்பவாத அரசியல், விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வாக்குகளின் அபரகரிக்க துடிக்கிறார். தேர்தலை மனதில் வைத்தே எடப்பாடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளித்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்த கட்சி பிரமுகர்களும் மேடையேறியிருக்கிறார்கள். இந்த அரசியலைகூட புரிந்துகொள்ளாத எடப்பாடி. அவர்களை வரவேற்று நன்றி தெரிவித்து அனுப்பியிருக்கிறார். இப்படித்தான் விஜய் பாடலில் `மைக்’ சின்னம் இருந்தாக கூறி விஜய் ரசிகர்களின் வாக்குகளை பெற்ற முயன்ற சீமான், இப்போது அ.தி.மு.க வாக்காளர்களை குறிவைத்திருக்கிறார். ஆனால் அது எதுவும் நடக்கப்போவதில்லை. தி.மு.க-வை தவிர மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கப்போகிறார்கள்” என்றனர்

இதுகுறித்து விளக்கம்கேட்டு நா.த.க-வின் தமிழ்மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வனிடம் பேசினோம், “இடைத்தேர்தலை மனதில் வைத்தே, அ.தி.மு.க-வின் போராட்டத்துக்கு ஆதரவளித்தோம் எனப் பேசுவது காழ்ப்புணர்ச்சி அரசியல். கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசு, இவ்விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க முயலும் எதிர்க்கட்சியையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

கார்த்திகைச் செல்வன்

எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் தி.மு.க அரசின் எதேச்சதிகாரப்போக்கை வேடிக்க பார்க்கச் சொல்கிறீர்களா? ஜனநாயக படுகொலை அரங்கேறுவதால் அ.தி.மு.க மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஜனநாயக மாண்புகளை காக்க தார்மீக அடிப்படையில் அதரவு கொடுப்பதென்பது ஆரோக்கிய அரசியல். திராவிட கண்ணாடி அணிந்திருப்பர்களின் பார்வையில் எல்லாமே வாக்கு அரசியலாகத்தான் தெரியும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க-வுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பேரரடி காத்திருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88