`முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுங்கள்’- சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்த மடாதிபதி

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 224 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து, யார் முதல்வர் என்ற இழுபறியில், டி.கே.சிவகுமாரின் நிபந்தனைக்கு இணங்க சித்தராமையாவை முதல்வராக நியமித்தது காங்கிரஸ். அதோடு, மாநிலத்தின் ஒரே துணை முதல்வராக நியமிக்கப்பட்ட டி.கே.சிவகுமார் காங்கிரஸின் மாநில தலைவராகவும் தொடர்ந்தார்.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா

இருப்பினும் பதவியேற்புக்குப் பின்னரும், கர்நாடக காங்கிரஸில் உட்கட்சி பூசல் நடப்பதாகவும், டி.கே.சிவகுமார் முதல்வர் பதவி விரும்புவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பேச்சுகள் அடிபட்டன. இத்தகைய பேச்சுகள் எழுந்தபோதிலும், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதத்தோடு ஓராண்டை நிறைவுசெய்தது. இந்த நிலையில், டி.கே.சிவகுமார் சார்ந்திருக்கும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர், சித்தராமையா தனது முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பெங்களூருவில் நடைபெற்ற கெம்பேகவுடா ஜயந்தி நிகழ்ச்சியில் பேசிய விஷ்வ ஒக்கலிகா மகாசமஸ்தான மடாதிபதி குமார சந்திரசேகரநாத சுவாமிஜி, “எல்லோரும் முதலமைச்சராகி அதிகாரத்தை அனுபவித்துவிட்டனர். ஆனால், நம் டி.கே.சிவகுமார் மட்டும் இன்னும் முதல்வராகவில்லை. எனவே, முதல்வர் பதவியை ஏற்கெனவே அனுபவித்த மற்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் சித்தராமையா, இனிவரும் காலங்களில் டி.கே.சிவகுமாருக்கு அந்தப் பதவியை விட்டுக்கொடுத்து அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி

சித்தராமையா மனது வைத்தால்தான் இது நடக்கும், இல்லையெனில் நடக்காது. எனவே, டி.கே.சிவகுமாரை முதல்வராக்க சித்தராமையாவை நமஸ்காரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த சித்தராமையா, “காங்கிரஸ் ஒரு உயர் கட்டளை கட்சி. இதுவொரு ஜனநாயகம். மேலிடம் என்ன கட்டளை இட்டாலும் நாங்கள் அதைப் பின்பற்றுவோம்” என்று கூறினார். அதேபோல் டி.கே.சிவகுமார், “மாநிலத்தின் திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் ஒப்புதல் நிலுவையில் இருப்பதால், அது குறித்து மாநில எம்.பி-க்களுடன் விவாதிக்க டெல்லிக்கு பயணம் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா

இவர்கள் இவ்வாறாகக் கூறினாலும், சித்தராமையாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா, “யார்தான் பதவியை விட்டுக்கொடுப்பார். மடாதிபதி கேட்பதால் விட்டுக்கொடுத்துவிடலாமா… அவர் தன்னுடைய மடாதிபதி பதவியை விடட்டும் நான் சுவாமிஜி ஆகிவிடுகிறேன். விடுவாரா அவர்… எந்த நோக்கத்தில் அவர் சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும், ஜனநாயக நாட்டில் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது” என்றார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

இன்னொருபக்கம், விவசாயத்துறை அமைச்சர் செல்வராயசாமி, “அதற்கும் ஒரு காலம் வரலாம். எம்.எல்.ஏ.க்களும், உயர்நிலைக் குழுவும் சேர்ந்து முடிவு செய்யும். மடாதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், கட்சிதான் இறுதி முடிவை எடுக்கும். டி.கே.சிவக்குமார் மாநில தலைவர், மற்றவர்களை விடவும் கட்சி மீது அதிக ஈடுபாடு கொண்டவர்” என தெரிவித்திருக்கிறார்.