Foxconn: “கல்யாணமாச்சா? வேலை கிடையாது!” – பெண்களை விரட்டி அடிக்கும் `iPhone’ ஃபாக்ஸ்கான்!

‘ஆண், பெண், சாதி, மதம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் தரப்பட வேண்டும்’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். வேலைவாய்ப்பைப் பெறுவது ஒருவரின் அடிப்படை உரிமையாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, திருமணமான பெண்களுக்கு வேலை தர மறுக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தைவானைச் சேர்ந்த ‘டெக் ஜயன்ட்’டான `ஃபாக்ஸ்கான்’ (Foxconn), ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூரில் இருக்கிறது.

இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்று கேள்விப்பட்ட ராய்ட்டர் செய்தி நிறுவனம் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஃபாக்ஸ்கான்

2023 மார்ச் மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை இருப்பதாக வாட்ஸ்அப் மூலம் வந்த விளம்பரத்தைப் பார்த்த பார்வதி மற்றும் ஜானகி என்ற இரு சகோதரிகள் வேலை கேட்டு அந்த நிறுவனத்திற்கு சென்றார்கள்.

சுமார் 20 வயது கொண்ட இந்த இருவரும் இந்தத் தொழிற்சாலையை அடைந்தபோது, அதன் மெயின் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கிருந்த செக்யூரிட்டி ஆபிசர், `உங்களுக்குத் திருமணமாச்சா?” என்று கேட்டிருக்கிறார்.

அந்த இரு பெண்களும் `ஆமாம்’ என்று பதில் சொன்னார்கள்; உடனே அந்த செக்யூரிட்டி ஆபீஸர், ”கல்யாணமாகியிருந்தா இங்கே வேலை தரமாட்டாங்க. நீங்க கிளம்புங்க” என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார்.

செக்யூரிட்டி ஆபீஸர் இப்படி சொன்னது நமக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கலாம். ஆனால், ஶ்ரீபெரும்புதூர் முழுக்கவே இந்த தகவல் நன்கு தெரிந்திருக்கிறது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை கேட்டுவந்த இந்த இரு பெண்களும் ஶ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என ஆட்டோ டிரைவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஃபாக்ஸ்கானுக்கு அழைத்துச் செல்லவந்த ஆட்டோ டிரைவர், ”உங்களுக்குக் கல்யாணமாச்சா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் ”ஆமாம்” என்று சொல்ல, ”கல்யாணமான பெண்களுக்கு அங்கே வேலை தரமாட்டங்களே!” என்று சொல்லி இருக்கிறார். ஆனால், நேரடியாகப் போய் கேட்டுத்தான் பார்ப்போமே என ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வந்தபோதுதான் செக்யூரிட்டி ஆபீஸர் ”வேலை இல்லை” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஐபோன் | Iphone

இது குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ஐபோனின் பாகங்களை அசெம்பிள் செய்யும் இந்தத் தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலைக்கு நியமிக்கப்படுவதில்லை. என்ன காரணம்?

திருமணமாகாத பெண்களை விட, திருமணமான பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகம் என்பதே முக்கியமான காரணம் என ஃபாக்ஸ்கான் நிர்வாகம் நினைக்கிறது.

இது குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியாக இருந்து, அதிலிருந்து வெளியேறிய அதிகாரி ஒருவரிடம் பேச, அவரும் அது உண்மை என விளக்கம் தந்திருக்கிறார்.

“பொதுவாக, திருமணமான பெண்களைக் கலாசார சிக்கல்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக ஃபாக்ஸ்கான் வேலைக்கு அமர்த்துவதில்லை. பெண்களுக்குத் திருமணமாகிவிட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நிர்வாகம் நினைக்கிறது’’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

உதாரணமாக, குடும்ப வேலைகள், குழந்தைப் பேறு மற்றும் அதிக விடுப்பு போன்ற காரணங்களால் திருமணமான பெண்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்படுவதில்லை என்கிறார்கள்.

இன்னொரு வித்தியாசமான காரணத்தையும் சொல்கிறார்கள். திருமணமான பெண்கள் அணியும் நகைகளால் இங்கு உற்பத்தி செய்யப்படும் செல்போன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே அந்தக் காரணம்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொல்லும் பதில் என்ன? ”2022-ல் பணியமர்த்தல் நடைமுறைகளில் இருந்த குறைபாடுகள் இருந்தன. ஆனால், அவற்றை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்” என்று சொல்லி இருக்கிறது.

ஆப்பிள்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சில ஆங்கில பிசினஸ் நாளிதழ்கள் வெளியிட, இந்த விஷயம் மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் காதுகளுக்கு எட்டியது. இந்த விஷயம் உண்மையா என்பது குறித்து விளக்கமான அறிக்கையை அளிக்கும்படி தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையிடம் அறிக்கை கேட்டிருக்கிறது. தமிழகத் தொழிலாளர் நலத் துறை என்ன அறிக்கை அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இந்த செய்தியை தமிழகத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சியும் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

நமது சட்டங்கள் பெண்களுக்கு சம உரிமையைத் தருகிறது. ஆனால், பல நிறுவனங்களில் திருமணத்தைக் காரணம் காட்டி பெண்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பது அல்லது குறைந்த  சம்பளத்திற்கு நியமிக்கப்படுவது என அநீதி இழைக்கப்படுபவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இது மாதிரியான பாகுபாடுகள் எப்போதுதான் ஒழியுமோ?