மகாராஷ்டிரா: காலியாகும் அஜித் பவார் கட்சி?! – 22 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் கட்சியில் சேர முடிவா?!

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சொற்ப தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியை தழுவியது. இதனால் அஜித் பவாருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அஜித் பவாரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சரத் பவாரிடம் செல்லும் மனநிலையில் இருக்கின்றனர் என்ற தகவல் பரபரக்கிறது.

இது குறித்து சரத்பவார் பேரனும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.எல்.ஏ.வுமான ரோஹித் பவார் கூறுகையில், ”அஜித் பவார் கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் எங்களை அணுகி இருக்கின்றனர். அவர்கள் சரத் பவார் அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை குறைக்க பா.ஜ.க அஜித் பவார் கட்சியை சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட சொல்லக்கூடும். அஜித் பவாரின் அரசியல் செல்வாக்கை குறைக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. அஜித் பவார் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை சந்தித்து பேசியுள்ளனர்” என்றார்.

அஜித் பவாருக்கு நெருக்கமானவர்கள் ஜெயந்த் பாட்டீலை சந்தித்து பேசியிருப்பதால் அவர்கள் சரத் பவார் அணியில் சேரக்கூடும் என்று மற்றொரு தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் தெரிவித்தார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவர் கூறுகையில், ”மக்களவை தேர்தலுக்கு பிறகு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சரத்பவார் அணிக்கு வர பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அணிமாறவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் சேர விரும்பினாலும் அவர்கள் அனைவரையும் சரத்பவார் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார். அவர்களில் 10-12 பேரை மட்டுமே கட்சியில் சேர்த்துக்கொள்வார். அப்படி அனைவரையும் கட்சியில் சேர்த்தால் ஏற்கனவே கட்சியில் இருப்பவர்களுக்கு அநீதி இழைத்ததாகிவிடும்.

எனவே ஒவ்வொன்றையும் தீவிரமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் இவ்விவகாரத்தில் சரத் பவார் முடிவு செய்வார்” என்றார். இது குறித்து அஜித் பவார் கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகி கூறுகையில்,”கட்சியில் நிலைமை சரியில்லை. மீண்டும் தற்போதுள்ள சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சந்தேகம் என்று எம்.எல்.ஏ.க்கள் நினைக்கின்றனர்” என்றார். அடுத்த மாதம் சட்டமேலவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் சரத் பவார் தனது அணி சார்பாக ஒருவரை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவார், சரத் பவார்

அந்த ஒருவர் வெற்றி பெற சரத்பவார் கட்சி வேட்பாளருக்கு மேலும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இதனால் இத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்கும் நிலை இருக்கிறது. அஜித் பவார் கட்சியில் நிலவும் சூழ்நிலையை பா.ஜ.க உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. அஜித் பவார் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவே மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. மேலும் அஜித் பவார் கட்சியுடனான உறவை துண்டிக்கவேண்டும் என்று மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க நிர்வாகிகள் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88