மதுரை: விமானப் பயணம், சட்டசபை, பி.டி.ஆரின் உபசரிப்பு… உற்சாகமடைந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரில் காண, சென்னைக்கு விமானத்தில் பறந்த மதுரை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உபசரித்து மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழியனுப்பி வைத்த மேயர் இந்திராணி

பல்வேறு நற்பணிகளை செய்துவரும் மதுரையிலுள்ள ரோட்டரி மிட் டவுன் கிளப், ‘வானில் சிறகடிப்போம்’ என்ற கருப்பொருளுடன் மதுரை மாநகராட்சி பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10 பேரை தேர்வு செய்து, சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று, சட்டமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் முன்னெடுப்பை செய்தது.

மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் விமான நிலையத்துக்கு வந்து மாணவர்களுக்கு பூங்கொத்தும், இனிப்புகளும் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

மாணவர்களுடன் அமைச்சர் பிடிஆர்

மாணவர்கள் கோபிகா ஸ்ரீ, சுல்தானா ரபிகா, ஸ்ரீ வர்சினி, புவனேஸ்வரி, பாண்டிச்செல்வம், சந்தானகுனார், கார்த்திக், ஸ்ரீகுமரன் ஆகியோர், தங்களது முதல் விமான பயணத்தை மேற்கொண்டு, சென்னையில் இறங்கி, அங்கிருந்து வாகனங்கள் மூலம் சட்டமன்றத்துக்குச் சென்றனர்.

அங்கு நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, மெரினா கடற்கரையை பார்வையிட்டனர். மாலை அவர்களை தன்னுடைய முகாம் அலுவலகத்துக்கு வரச்செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவர்களுடன் உற்சாகமாக பேசி, தன்னுடைய பள்ளிக்கால அனுபவங்களை பகிர்ந்து, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மதுரை விமான நிலையத்தில்

பின்பு, முதன்முறையாக விமானத்தில் பயணித்த அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தவர், தன்னுடைய முதல் விமான பயண அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

முகாம் அலுவலகத்திலேயே அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாலை நேர சிற்றுண்டியை பரிமாறி உபசரித்ததவர், அவர்களுடன் கலகலவென்று பேசி பின்பு அவர்களை ஊருக்கு வழியனுப்பி வைத்தார்.

மாணவர்களுக்கு சிற்றுண்டி உபசரிப்பு

‘முதன்முறையாக விமானத்தில் பறந்ததும், சட்டமன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததும், அமைச்சரின் அன்பான உபசரிப்பில் திளைத்தும், ஒரே நாளில் சென்னை சென்று மதுரைக்கு திரும்பியதும் என… இந்த அனுபவங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும், கனவுபோல் உள்ளது’ என்று பரவசத்துடன் கூறினர் மாணவர்கள்.