நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மருத்துவத் துறைகளிலும், பல்வேறு சுகாதாரக் குறியீடுகளிலும் நாட்டுக்கு முன்னோடியாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வியின் மாணவர் சேர்க்கைதான் இந்த சாதனைக்கு அடிப்படை காரணம்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி

முனைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, இந்த சாதனைக்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர். பள்ளிக்கல்வியின் மதிப்பெண்கள் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை தமிழ்நாட்டில் பின்பற்றுகிறோம்.

இந்த முறையால்தான் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு பின்னால், மருத்துவ படிப்பு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. பயிற்சிக்கு செல்ல முடியாத கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் இந்த தேர்வில் வெல்ல முடியாது.

ஸ்டாலின்

அது மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும், பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கி வரும் மருத்துவ சேவையை, ஒரே நேரத்தில் இந்த தேர்வு முறை பாதிக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலலிருந்தே, அதனை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க சார்பில் மட்டுமல்ல, கழக இளைஞரணி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குறிப்பாக மாணவரணி, மருத்துவ அணியை ஒருங்கிணைத்து ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இவற்றையெல்லாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, அவரின் பரிந்துரையில் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது.

ஆளுநர் ரவி

ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த சட்டப்பேரவையில் 13. 9.2021 அன்று தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்பிற்கான சேர்க்கை சட்டம் 2021, சட்ட முன் முடிவு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகும் ஆளுநரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல், மறுபரிசீனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், என் தலைமையில் 5.2.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த சட்ட முன் முடிவு மீண்டும் சட்டமன்றக் கூட்டத்தில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 8.2.2022 அன்று சட்ட முன்முடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. இது குறித்து ஒன்றிய அரசால் கேட்கப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில் வழங்கியுள்ளது.

நரேந்திர மோடி

இந்த நிலையிலும் இதற்கு ஒப்புதலளிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் அரங்கேறியிருக்கும் சம்பவங்கள், போட்டி தேர்வுகளின் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைகுலைய செய்திருக்கிறது. இதுவரை இருந்திராத அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.

தேர்வுகள் காலதாமதமாக தொடங்கியதாக காரணம் காட்டி விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வும் நடத்தப்பட்டது. பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள் வெளியாகின. தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளரே வினாத்தாள்களை நிரப்பியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

பல ஆண்டுக்காலம் உழைத்து, பெரும் செல்வம் செலவழித்து, போட்டி தேர்வுக்கு தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இந்த சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடைபெறவில்லை எனக் கூறிய ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியதற்கு பின்பு, இந்த தேர்வை நடத்தும் தலைவரை மாற்றியுள்ளது. மேலும், தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பல ஆண்டுக்காலமாக நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், மக்களும் தனியே போர் தொடுத்து வந்துள்ள நிலையில், நீட் தேர்வின் உண்மையான நிலைகளை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை, அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுக்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

இந்த சூழலில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றவும் தேவையான முன்னெடுப்பாக, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வியை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக மாற்றும் வகையில், மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

ராகுல், அகிலேஷ்

இந்த தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களித்து, பள்ளிக்கல்வியில் பெறும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவ சேர்க்கை மேற்கொள்வதற்காக இந்த சட்டமன்ற பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமன்ற முன்முடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்.

தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து வரும் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களில் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறையை கைவிடும் வகையில் தேசிய மருத்துவமனை சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.