கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

கள்ளக்குற்ச்சி கலவரம் | தனியார் பள்ளி

அந்த புகாரின் அடிப்படையில், சின்னசேலம் போலீஸார், தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் தாளாளர், செயலாளர் உட்பட 5 பேரும், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 2022 ஆகஸ்ட் 29-ம் தேதி வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில், “ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் ஆய்வறிக்கையின்படி, அந்த மாணவி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், இரண்டு ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும். மாணவ மாணவிகளை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம். மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் | சிசிடிவி

உயிரிழந்த மாணவியின் தற்கொலைக் குறிப்பில்கூட, ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே , மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொருந்தாது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து தனியார் பள்ளி சூறையாடப்பட்ட வழக்கை, கள்ளக்குறிச்சி போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வந்தது. அந்த வழக்கை வேறு ஒரு புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அந்த கலவர வழக்கில் 519 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 166 பேர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் திராவிட மணி என்பவர் கூட்டத்தை சேர்த்திருக்கிறார். அவரிடமும், உயிரிழந்த  மாணவியின் தாயாரிடமும் போலீஸார் இதுவரை விசாரணை நடத்தவில்லை’ என்று கூறினார். அதையடுத்து, `சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் ஏன் அந்த இருவரிடமும் விசாரணை நடத்தவில்லை ? நல்ல நாள் வரட்டும் என்று போலீஸார் காத்திருக்கிறார்களா ? இருவருக்கும் எதிரான ஆதாரங்கள் இருந்தால் அவர்களை வழக்கில் சேர்ப்பீர்களா?’ என்று போலீஸாரிடம் கடுகடுத்தார் நீதிபதி.

சென்னை உயர் நீதிமன்றம்

அதையடுத்து போலீஸ் தரப்பில், `கலவரத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இன்னும் நான்கு மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விடும். திராவிட மணி மற்றும் பெண்ணின் தாயாருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால், அவர்களும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டது. அதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 3-ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.