‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளரும் கிளாசிக் போலோ நிறுவனத்தின் உரிமையாளருமான சிவராமின் மகள் அக்ஷயா மற்றும் அவிநாசி சுபம் டெக்ஸ் உரிமையாளர் ஈஸ்வரன் மகன் தினேஷ் ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் திருப்பூரில் நடைபெற்றது.
பெரும்பாலான திருமணங்களில் கண்ணாடி டம்ளர், உணவு மேஜை விரிப்பு என அதிக அளவில் நெகிழிகள் (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படுவதோடு உணவும் விரயமாக்கப்படும். ஆனால், இந்த திருமணம் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த முறையில் ஜூரோ வேஸ்ட் என்ற அடிப்படையில் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவராம், “திருமணத்தை ஜூரோ வேஸ்ட் மேலாண்மை முறையில் நடத்த திட்டமிட்டோம். இதன்படி, வாழை இலை, பாக்குத் தட்டு, காகித டம்ளர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தண்ணீர் பாட்டில் தவிர்க்க முடியாதது என்பதால் நெகிழி தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் பாட்டில்கள், அதன் மூடிகள், ஐஸ்கிரீம் கப்புகள், மளிகைப் பொருள்கள் அடைக்கப்பட்ட நெகிழி கவர்கள், பால் பாக்கெட்டுகள் என சுமார் 800 கிலோ நெகிழிகள் கிடைத்தன. அவற்றை முறையாக சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதேபோல், சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளின் கழிவுகள் சுமார் 500 கிலோவை இயற்கை உரமாக மாற்ற அனுப்பி வைத்தோம். பயன்படுத்தப்பட்ட தேங்காயின் கொட்டாங்குச்சிகள் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் செய்யும் நிறுவனத்துக்கு வழங்கினோம். மொத்தத்தில் திருமணம் முடித்து வெளியே வரும்போது, நாங்கள் பயன்படுத்திய எந்த குப்பைகளும், கழிவுகளும் அங்கு இல்லை.
இதை வெறும் திருமணமாக மட்டும் பார்க்கவில்லை. திருமணத்துக்கு வருபவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு இயற்கை சார்ந்த ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சூழலியலாளர்களை அழைத்து கருத்தரங்கை நடத்தினோம்” என்றார்.
திருமணத்தின் ஒரு பகுதியாக ‘இயற்கை வளங்களே ஆதாரம்.. மனதில் உள்ள கேள்விகள்.. மனம் திறந்த பதில்கள்’ என்ற தலைப்பில் சூழலியளாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கும் நடைபெற்றது.