பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம், சில பெண்கள் திருமணம், குழந்தை என்றான பின்னர், தங்களது எதிர்காலத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்கின்றனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளியான ராதிகா குப்தா, எடல்வீஸ் (Edelweiss) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஆக உயர்ந்து, பல பெண்களுக்கும் முன்மாதிரி ஆகியுள்ளார்.
தனது 25-வது வயதில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து, தன் நண்பருடன் சேர்ந்து நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை தொடங்கினார் ராதிகா குப்தா. பின்னர் அந்த நண்பரையே திருமணம் செய்து கொண்டார். பிறப்பிலேயே கழுத்து வளைந்த மாற்றுத்திறனாளியான ராதிகா குப்தா, அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி இன்றைக்கு இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
திருமணம், குழந்தை உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மத்தியில் தன் கரியரிலும் கவனம் செலுத்தி, மிகப் பெரிய நிதி நிறுவனத்துக்கு தலைமை தாங்குவது குறித்து, அவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டியில், ’நிறுவனத்தின் சி.இ.ஓ, ரியாலிட்டி ஷோ நடுவர், அம்மா… இதில் எந்த வேலை கடினமாக இருப்பதாக நினைக்கிறீகள்?’ என்று கேட்கப்பட, ”அனைத்து வேலைகளையும் கலந்து செய்வதுதான் கடினமானது என்று நினைக்கிறேன். உங்களுக்காகவும், உங்களது மனதிற்காகவும், உடம்புக்காகவும் போதிய நேரம் எடுத்துக்கொள்வது அவசியம். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வேலையும் கடினமானதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
’பல பெண்கள், குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு தங்களது வேலையை குறைத்துக்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் குழந்தை பெற்ற பிறகு கூடுதலாக வேலை செய்கிறீர்கள். அதனை எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட, ”நான் ஒரு முடிவு எடுக்கும்போது அதனை பயம் வெல்லவிடாமல் பார்த்துக்கொள்வேன். பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பயணம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அது போன்ற பயம் தொற்றிக்கொண்டால் அது மோசமானதாகிவிடும். ஆனால், எனக்கு அதுபோன்ற எந்த பயமும் ஏற்படவில்லை. எனக்கு போதுமான அளவு ஆதரவு இருந்தது.
நான் குழந்தை பெற்ற பிறகு, என் அம்மா, ’குழந்தையை பார்க்க வேண்டும் என்று நினைத்து எந்தவித வளர்ச்சி அல்லது வாய்ப்பையும் இழந்துவிடாதே’ என்று என்னிடம் கூறினார். என் கணவர் எனக்கு மிகவும் ஆதராக இருக்கிறார். குழந்தைக்கு டயபர் மாற்றியது முதல், சாப்பாடு ஊட்டுவது, படிக்க வைப்பது வரை அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கிறோம்.
பெண்களிடம் நான், ’எப்போதும், எதையும் தனியாகச் செய்யாதீர்கள்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். ’சூப்பர் மனைவி, சூப்பர் அம்மா போன்ற விளம்பரங்களில் மயங்கிவிடாதீர்கள். நீங்கள் அனைத்திலும் சூப்பர் கிடையாது. எனவே, உதவிகேட்கத் தயங்காதீர்கள் என்று கூறுவேன்” என்றார்.
’உங்களது அன்றாட வேலைகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக்கொள்கிறீர்களா?’ என்று கேட்கப்பட, ”எந்த வேலைக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக்கொள்வது கிடையாது. ஏனென்றால், தினமும் வேலைகளை செய்வது தொடர்பாக போராட வேண்டியிருக்கிறது. நான் ஃபைனான்ஸ் மார்க்கெட்டில் வேலை செய்வதால் சந்தை நிகழ்வுகளின் அடிப்படையில் வேலை இருக்கும். எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ நேரம் ஒதுக்குவதில்லை. எப்போதாவது, குடும்பத்திற்காக நாள் முழுக்க செலவு செய்வேன். எந்த வேலை முக்கியமோ அதற்கு முன்னுரிமை கொடுப்பேன். அதனை எழுதி வைத்துக்கொள்வேன். விடுமுறை நாள்களை என் மகனுக்காக அல்லது என்னை புத்துணர்வாக்கிக்கொள்ள பயன்படுத்திக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
’குழந்தை வளர்ப்பது மிகவும் செலவு மிக்க ஒன்று. அது போன்ற நேரத்தில் பெற்றோர் நிதிப்பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்ற கேள்விக்கு, ’’முன்கூட்டியே திட்டமிடுங்கள். இந்தியாவாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் உயர்படிப்புக்கு அதிக செலவு பிடிக்கிறது. என் மகனின் படிப்புக்கு அவன் பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து நாங்கள் இரண்டு பேரும் எங்களது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்கிறோம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம். முன்கூட்டியே திட்டமிட்டால் எதையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரிகளில் பெண்கள் குறைவாக இருப்பது குறித்து கேள்விக்கு, ”ஆமாம், இது துரதிஷ்டவசமானது. நான் கர்ப்பிணியாக இருந்த போது, யாராவது கர்ப்பிணி தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறாரா என்று தேடினேன். ஆனால், யாரையும் பார்க்கமுடியவில்லை.
நான் ஆரம்பக்காலத்தில் 7 இடங்களில் வேலைக்குச் சென்று நிராகரிக்கப்பட்டேன். இதனால், தற்கொலை வரை யோசிக்கவைத்த மன அழுத்தத்திற்குச் சென்றேன். அதன் பிறகுதான் வேலை கிடைத்தது” என்று கூறியிருக்கிறார் ராதிகா குப்தா.