‘ஓயாத சலசலப்பு?’ – தமிழிசையின் திடீர் டெல்லி பயணம்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தலைவர் தமிழிசை, “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி இல்லாமல் போயிருக்கும். கூட்டணி வைக்கலாம் என்றுதான் நாங்களும் வியூகம் அமைத்தோம். ஆனால், சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை.” என்றவர், சமூக ஊடக தொண்டர்களையும் சாடினார். அதாவது, “உள்ளே நடக்கும் கட்சிப் பிரச்னைகள், கட்சியின் தலைவர்களைத் தவறாக எழுதுவீர்கள் என்றால், முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கிறேன்.

அண்ணாமலை – தமிழிசை திடீர் சந்திப்பு

நான் கடுமையாக உழைப்பதற்காக வந்து இருக்கிறேன்” என கொதித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, “உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது” என தமிழிசையை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது தமிழிசை தரப்பை கொதிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. இதற்கிடையில்தான் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் தமிழிசையிடம் மேடையிலே அழைத்து பேசிய அமித் ஷா, முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு கண்டிப்பது போல பேசியிருந்தார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாமலேயே, ‘அண்ணாமலையை பகைத்துக் கொண்டதற்கு, தமிழிசையைக் கண்டித்துவிட்டார் அமித் ஷா’ என சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேச தொடங்கினர். இதையடுத்து தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில், “2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து என்னிடம் கேட்டார். மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார்.

அமித்ஷா

இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற யூகங்களை தெளிவுபடுத்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் புயலை கிளம்பியதால் டெல்லிக்கும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து தமிழிசையையுடன் சுமூகமாக செல்லுங்கள் என அண்ணாமலைக்கு உத்தரவிட்டது டெல்லி. அதன்படி தமிழிசையின் இல்லத்துக்கே அண்ணாமலை சென்று பேசினார். இதனால் பிரச்னை ஓரளவுக்கு சுமூகமானது. இதையடுத்து கடந்த 19.6.2024 ஆண்டு பா.ஜ.க-வின் மைய குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தனது ஆதரவாளர்களுடன் தமிழிசை பங்கேற்றிருந்தார். கூட்டத்தில் பேசிய தமிழிசையின் ஆதரவாளர்கள் சிலர், “சீனியர் லீடர் என்றும் பாராமல் அக்காவை எப்படி திருச்சி சூர்யா விமர்சிக்கலாம்.

யார் கொடுக்கும் தைரியத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார். உடனடியாக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” எனக் கொதித்தனர். மறுப்பக்கம் அண்ணாமலை தரப்பினர், ‘நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு மாநில அண்ணாமலை மட்டும்தான் காரணம்’ என கல்யாணராமன் பேசியது சரியா?’ என வெடித்திருக்கிறார்கள். இதற்கிடையில் குறுக்கிட்ட சீனியர் தலைவர்கள் சிலர், “தர்மபுரம் ஆதீனத்தை மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் கட்சிக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது.

கமலாலயம்

மேலும் குற்றச்செயல்களில் தொடர்புடைய அனைவரையும் நீக்க வேண்டும்’ எனப் பேசினர். இதன்படிதான் திருச்சி சூர்யா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தமிழிசைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்துதான் டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார் தமிழிசை.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “அண்ணாமலை, தமிழிசை இடையேயான பிரச்சனை இன்னும் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக முன்னாள் தலைவர் தமிழிசைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்து வருகிறார். இதையடுத்துதான் டெல்லிக்கு செல்ல முடிவு எடுத்தார். அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் குறித்தும் தமிழக பாஜகவில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் விரிவாக பேச இருக்கிறார். இது அண்ணாமலை தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டெல்லியில் ஆட்சி அமைப்பு, பதவியேற்பு விவகாரங்கள் முடிவுக்கு வந்திருப்பதால், இனி கட்சி விவகாரங்கள் சூடுபிடிக்கும்.!” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88