`செங்கோல் வேண்டாம்… அரசியல் சாசனம் வேண்டும்!’ – சமாஜ்வாதி கடிதம்… நிராகரித்த சபாநாயகர்!

கடந்த ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. மதசார்பற்ற இந்தியாவில், புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்து மத சடங்குகளின்படி சகல பூஜைகளை செய்து, செங்கோலை ஏந்தி ஆதீனங்களுடன் அவைக்குள் நுழைந்து சபாநாயகர் இருக்கைக்கு அருகில் அதை நிறுவினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி – செங்கோல்

மன்னராட்சி முடிந்து, ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்து, அரசியல் சாசனப்படி ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் எதற்கு மீண்டும் மன்னராட்சியின் செங்கோல் என எதிர்க்கட்சிகள் பலவாறு கேள்வியெழுப்பின. இருப்பினும், செங்கோல் என்பது தமிழ் கலாசாரம், நீதியின் சின்னம், அது புனிதமானது என பல்வேறு விளக்கங்களை அடுக்கியது பா.ஜ.க அரசு.

இவ்வாறாக, 17-வது மக்களவை முடிந்து 18-வது மக்களவை தொடங்கியிருக்கும் நிலையில், மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலுக்குப் பதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை அங்கு வைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தை மூன்றாவது பெரிய கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கோரிக்கை விடுத்திருக்கிறது.

சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி

இதுதொடர்பாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கும் சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி ஊடகத்திடம் இதுபற்றி பேசுகையில், “அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்தின் சின்னம். ஆனால், பாஜக கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது. செங்கோல் என்பது மன்னரின் கையிலிருக்கும் தடி. மன்னராட்சிக்குப் பிறகு நாம் சுதந்திரமடைந்துவிட்டோம். இப்போது, ​​வாக்களிக்கத் தகுதியான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கான அரசாங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது, நாடு மன்னரின் தடியால் இயங்குமா அல்லது அரசியலமைப்பின்படி இயங்குமா… எனவே ஜனநாயகத்தைக் காப்பற்ற நாடாளுமன்றத்தில் செங்கோலை நீக்கி விட்டு அரசியலமைப்பை நிறுவ வேண்டும்” என்றார்.

பின்னர், தனது கட்சி எம்.பி-யின் கருத்து குறித்து பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “செங்கோல் நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்குத் தலைவணங்கினார். ஆனால், இந்த முறை பதவிப்பிரமாணம் செய்யும்போது அதற்கு அவர் தலைவணங்க மறந்துவிட்டார். அதனால், எங்கள் எம்.பி பிரதமருக்கு அதை நினைவூட்ட விரும்பினார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

அகிலேஷ் யாதவ்

இவரைத்தொடர்ந்து, சமாஜ்வாதி எம்.பி-யின் கோரிக்கையை ஆதரித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “செங்கோல் என்பது மன்னராட்சியைக் குறிக்கிறது. அந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எனவே, மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நாம் கொண்டாட வேண்டும்” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்தார். அதேபோல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி-யும் லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பார்தியும், இந்த கோரிக்கையை யார் வைத்திருந்தாலும் அதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

செங்கோல்

இருப்பினும், பா.ஜ.க தரப்பிலிருந்து இதற்கு எதிர்வினையாற்றிய அதன் செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இந்தியா மற்றும் தமிழ் கலாசாரத்தை சமாஜ்வாதி அவமத்துவிட்டது என்றும், இந்த செங்கோல் அவமதிப்பை தி.மு.க ஆதரிக்கிறதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் விமர்சித்து கேள்வியெழுப்பினார். இப்படியாக இந்த விவகாரம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி விவாதமாக மாற, சபாநாயகர் ஓம் பிர்லா இது எதையும் பொருட்படுத்தாமல், சமாஜ்வாதி எம்.பி-யின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதனிடையே உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அவர். “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88