பாட்டனார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், பாட்டியும் முன்னாள் பிரதமர், தந்தையும் முன்னாள் பிரதமர். தாய், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். இப்படியாக, இந்திய தேசத்தின் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி!

அப்படிப்பட்ட ராகுல் காந்தி முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கியபோது, பட்டுக்கம்பளம் விரித்து அவர் வரவேற்கப்படவில்லை. மாறாக, அரசியலுக்கு வந்த பிறகு, பல சோதனைகளை, வேதனைகளை, அவமானங்களை அவர் சந்தித்தார். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்தார். இன்றைக்கு நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துவிட்டார் ராகுல் காந்தி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமராக நரசிம்ம ராவும், நிதியமைச்சராக மன்மோகன் சிங்கும் இருந்தார்கள். அடுத்ததாக 1996-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பு ரீதியாக பலவீனமடைந்து, தொண்டர்கள் சோர்வடைந்தனர். சோனியா காந்தி வந்தால்தான் கட்சியை மீட்டெடுக்க முடியும் என்ற குரல்கள் கட்சிக்குள் ஒலித்தன. உடனே, அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேரியை நீக்கிவிட்டு, சோனியா காந்தி தலைவராக்கப்பட்டார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் நிர்வாகிகள் நினைத்தது நடந்தது. 2004-ம் ஆண்டு, 14-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில்தான், ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்திதான் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அப்போது பரபரப்பாக அடிபட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தார். ராகுல் காந்தியின் அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அமேதி, ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி வெற்றிபெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில்தான், அதே தொகுதியில் ராகுலின் தாயார் சோனியா காந்தி எம்.பி-யாகத் தேர்வு பெற்றார். அங்கு மகன் போட்டியிட முடிவுசெய்ததால், ரேபரேலி தொகுதிக்கு மாறினார் சோனியா காந்தி.

அப்போது, வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரமாண்டமான பிரசாரம் நாடு முழுவதும் பா.ஜ.க-வால் மேற்கொள்ளப்பட்டது. அதைப் பார்த்து, மீண்டும் பா.ஜ.க-வே வெற்றிபெறுமோ என்ற சிலர் நினைத்தனர். ஆனால், ஜெயித்தது என்னவோ காங்கிரஸ்தான்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

அந்தத் தேர்தலில், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அதாவது, எட்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. அந்த அரசுக்கு சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன.

காங்கிரஸ் அரசு அமைந்தாலும், அந்த அமைச்சரவையில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை. சில நிலைக்குழுக்களில் உறுப்பினராக மட்டும் அவர் இருந்தார். அப்போது, அரசியல், சமூகம் சார்ந்து அவர் வெளிப்படுத்திய கருத்துகள், ராகுல் காந்தி எப்படிப்பட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்க ஏதுவாக இருந்தன. ‘இந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துபவன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ராகுல் காந்தி, பிளவுவாத அரசியலை விமர்சித்தார். சாதி, மத ரீதியான பதற்றத்தைக் குறைக்க முயல்வேன் என்று அப்போது அவர் சொல்லியிருந்தார்.

அதன் பிறகு, 2007-ல் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் ராகுல் காந்தி முக்கிய முகமாக இருந்தார். ஆனால், 403 இடங்கள் கொண்ட உ.பி-யில் 22 இடங்களையே அப்போது காங்கிரஸ் ஜெயித்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக ராகுல் நியமிக்கப்பட்டார். அத்துடன், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு பொறுப்பாளராகவும் ராகுல் நியமிக்கப்பட்டார்.

ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி

2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர்ந்தது. அந்தத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். ஆனாலும், அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை.

அடுத்துவந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மொத்தம் 44 இடங்களில்தான் வெற்றிபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில், சோனியா காந்திக்கு அடுத்தபடியாக ராகுல் காந்திதான் காங்கிரஸின் முக்கிய முகமாக இருந்தார்.

ஆனால், பா.ஜ.க-வினர் அவரை ஒரு தலைவராக அங்கீகரிக்கத் தயாராக இல்லை. பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா தொடங்கி, அத்தனை பா.ஜ.க தலைவர்களும் ‘பப்பு’ என்று ராகுல் காந்தியை கேலி செய்தார்கள்.

2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனால், இந்த முறை 52 எம்.பி-க்களை காங்கிரஸ் பெற்றது. வழக்கம்போல அமேதியில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. அதே நேரம், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோற்றார். ஆனாலும், வயநாடு எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு அவர் சென்றார். கட்சியின் தோல்வி காரணமாக கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராகுல் காந்தி

அதன் பிறகு, தனது அரசியல் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்திய ராகுல் காந்தி, 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற நடைப்பயணம் மேற்கொண்டார்.

137 நாள்கள், 4080 கிலோ மீட்டர், 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என அவர் மேற்கொண்ட நடைப்பயணத்தின்போதுதான், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வுசெய்யப்பட்டார்.

அந்த நடைப்பயணம் தேசிய அளவில் ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்தியது. அந்த நடைப்பயணத்தில் ராகுலுடன் பல ஆளுமைகள் கைகோத்தனர். அந்த நடைப்பயணத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய தலைவராக அவர் உயர்ந்தார். பப்பு என்று கேலிப் பேச்சுகள் காலியாகின. அப்போதுதான், இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-விடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்.

பாரத் ஜோடோ யாத்திரை

மீண்டும், 2024-ம் ஆண்டு கிழக்கிலிருந்து மேற்கு வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டார். மணிப்பூரிலிருந்து அதைத் தொடங்கினார். வடகிழக்கு மாநிலங்கள், பீகார், உ.பி என செல்லுமிடங்களில் பெரும் கூட்டம் கூடியது. அதன் பிறகுதான், 2024 மக்களவைத் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது. பப்பு என்று கேலி பேசிய மோடியும், அமித் ஷாவும் ராகுல் காந்தியை குறிவைத்து பிரசாரம் செய்தனர். 400 இடங்களில் ஜெயிப்போம் என்ற மோடியின் முழக்கம் பலிக்கவில்லை. 240 இடங்களிலேயே பா.ஜ.க திருப்திபட்டு கொண்டது. இதற்கு ராகுல் காந்தியின் யாத்திரைகளும், பிரசாரமும் முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடியை திருடன் என்று பொருள்பட பேசிவிட்டார். அது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2023-ம் ஆண்டு மார்ச் 23 தேதி சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஒரு மாதம் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற்த்தின் தீர்ப்பு செல்லாது என்று உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு வந்தார் ராகுல்.

ராகுல் காந்தி

இப்போது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து, தனது அதிரடி அரசியலைத் தொடங்கிவிட்டார் ராகுல். புதிய ஆட்சி அமைந்த 15 நாள்களில் 10 சொதப்பல்கள் என்ற ரீதியில் அவர் பதிவிட்ட ட்வீட், தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

ராகுலின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.