சேலம்: சிறை டியூட்டியில் `விரக்தி’ – மனநலம் பாதிக்கப்பட்ட கைதிமீது தாக்குதல்; வார்டனுக்கு மெமோ!

சேலம், அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள மத்திய சிறையில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழிப்பறிக் கைதி ஒருவர், கடந்த ஏழு மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளது. சிறை வார்டனங்களை `மாப்பிள்ளை’ `மச்சான்’ `அண்ணன்’ என்று அழைத்து வந்திருக்கிறார். இதையடுத்து மனநல நிபுணர்கள் அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதில், அவர் மனக்குழப்பத்தில் இருப்பது தெரியவந்தது. இதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ரஞ்சித் குமார் என்ற சிறை வார்டன், கைதியை அடைத்து வைத்திருக்கும் ’பி’ கிளாஸ் வகுப்பு அறைக்குச் சென்றார். மதிய சாப்பாடு வழங்கப்பட்ட நேரத்தில் அதனை சாப்பிடாமல் இருந்திருக்கிறார் கைதி. அதனால் அவரைக் கண்டித்தவர், `குளித்துவிட்டு சாப்பிடு’ எனக் கூறியுள்ளார்.

சேலம் மத்திய சிறை

அப்போது வார்டனை `மாப்பிள்ளை’ என்று அழைத்ததால், அவருக்குக் கோபம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், லத்தியால் கைதியை தாக்க முயன்றுள்ளார். அப்போது லத்தியைப் பறித்த கைதி, வார்டனை தாக்கியதுடன் கழுத்தைப் பிடித்துள்ளார். இதில், கழுத்தில் நகக்கீரல் விழுந்தது. இதையடுத்து சக கைதிகளும் வார்டன்களும் ஓடி வந்து இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தி உள்ளனர். இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத் விசாரணை நடத்தினார். காயமடைந்த வார்டன் ரஞ்சித் குமாரை சிறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததுடன், கைதியை இரண்டு மாதங்கள் உறவினர்கள் சந்திக்க தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

இது குறித்து சிறைக்கண்காணிப்பாளர் வினோத்திடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட கைதி என்னையுமே ’ப்ரோ’ன்னு தான் கூப்பிடுவார். அவர் மனநல பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வார்டன் தேவையில்லாமல் சீண்டியுள்ளார். அதனால்தான் மோதல்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை செய்ததில், வார்டன் ரஞ்சித் குமார் 8 மணி நேர டியூட்டி பார்க்கக்கூடிய கார்டு ஆவார். அவருக்கு திடீரென 24 மணிநேர டியூட்டி போட்டவுடன், அவருக்கு டியூட்டியை பார்க்க விருப்பமில்லை. இதனால் இது மாதிரி பிரச்னை செய்தால், டியூட்டி போடமாட்டார்கள் என்கிற நினைப்பில் செய்துள்ளார். எனவே, அவரிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளேன்” என்றார்.