மத்திய அரசு சமீபத்தில் காரீப் 2024-25- ம் ஆண்டுக்கான பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 என்றும், சன்னரகநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 2024-25 காரீப் கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 மற்றும் சன்ன ரகம் ரூ.2,450-க்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நெல்

தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை எந்தளவுக்கு விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, “தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றும் செயல் இது. தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டல் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் உயர்த்தபட வில்லை.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 குவிண்டால் நெல் 3,000, 3,100 என்று உயர்த்தி வழங்கியுள்ளது. தமிழக அரசால் மட்டும் ஏன் உயர்த்தி வழங்கப்பட முடியவில்லை? நிதி ஆதாரம் இல்லை என்பது ஏமாற்று வேலை. இப்படி சொல்லி சொல்லியே தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது தி.மு.க அரசு. நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் மாற்றுப் பயிருக்கும் செல்ல முடியவில்லை. மாற்று பயிர் என்று பருத்தி, எள் சாகுபடிக்கு மாறினாலும், டெல்டாவில் பெய்யும் மழைக்கு அவையெல்லாம் தாக்கு பிடிப்பதில்லை. நெல் விவசாயம்தான் ஓரளவுக்கு கைகொடுத்து வருகிறது.

பி.ஆர்.பாண்டியன்

நெல் சாகுபடி செழிக்க வேண்டுமென்றால் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தை ஆளும் மு.க.ஸ்டாலினோ, இந்தியாவை ஆளும் மோடியோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இந்த விஷயத்தில் ஸ்டாலினும் மோடியும் ஒன்றுதான். நெல் உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலின் விவசாயிகளுக்கு 105, 130 ரூபாய் என்று பிச்சை போடுகிறார். இந்த அரசு விவசாயிகளுக்கான சாதகமான அரசு அல்ல. சொல்லப்போனால் விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சி.நல்லா கவுண்டரிடம் பேசியபோது, “இந்த ஊக்கத்தொகை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றாது. காரணம் தேர்தல் அறிக்கையில் சொன்னதைகூட செயல்படுத்த முடியாத அரசாக இருந்து வருகிறது. விவசாயிகளை கலந்தாலோசித்து இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடவில்லை.

அவர்களுக்குரிய அதிகாரிகளிடம் மட்டுமே கலந்தோலோசித்து ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வெளி மார்க்கெட்டிலேயே 1 கிலோ நெல் 30 ரூபாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதைவிட கூடுதலாக அறிவித்தால்தான் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 2,450 ரூபாயை வைத்து விவசாயிகள் என்ன செய்ய முடியும். விவசாயத்துக்கு ஒருநாள் ஆண் கூலியாள்களுக்கு 1000 ரூபாய், பெண் கூலியாள்களுக்கு 500 ரூபாய். இவ்வளவு கொடுத்தாலும் ஆள்கள் வருவதில்லை. விவசாயமே செய்ய முடியவில்லை என்று பல விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லா கவுண்டர்

இதையெல்லாம் உணர்ந்துதான் தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தியிருக்க வேண்டும். நம்மை விட பின்தங்கிய மாநிலங்களெல்லாம் நெல் விலையை 3,000 ரூபாய்க்கு உயர்த்தியிருக்கின்றன. தமிழக அரசு இப்படியென்றால், மத்தியிலுள்ள மோடி அரசு இதைவிட மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2014-ல் மோடி பிரதமராக வந்தபோது ஒரு குவிண்டால் நெல் 1,310 ரூபாய் இருந்தது. அதை 2,320 ரூபாயாக உயர்த்தியிருக்கிறேன் என்று மார்தட்டுகிறார், பிரதமர் மோடி. 10 ஆண்டுகளில் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது, நெல் உற்பத்தி செலவு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதை அறிவாரா மோடி? மொத்தத்தில் இந்த ஊக்கத்தொகை எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயனளிக்க போவதில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.