கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் காணொளி காட்சி மூலம் இப்பள்ளியைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தலைமை வகித்தார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் சிறந்த முறையில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு முக்கியமான பொதுத்துறை நிறுவனம் புரபஷனல் விதிமுறைகளின்படி பயிற்சி மையம் தொடங்கியது முன்னுதாரணமான நகர்வாகும். மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைப் போன்றே கே.எஸ்.ஆர்.டி.சியும் பின்பற்றியுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி மைதானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும். பயிற்சி வகுப்புக்களுடன், மோட்டார் இயந்திரங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்கான தியரி வகுப்புக்களும் நடத்தப்படும். கனரக வாகனங்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயிற்சிகளுக்கு புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

ஓட்டுநர் பயிற்சிபள்ளி தொடக்கவிழா

தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை விடக் குறைந்த கட்டணத்தில், அதாவது அவர்களை விட 40 சதவிகிதம் குறைந்த கட்டணத்தில் இங்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். கியர் உள்ள மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களுக்கு 3,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக நான்கு சக்கர வாகனங்களுக்கான பயிற்சிக்கு ஒரே மாதிரியாக 9000 ரூபாயும், இருசக்கர வாகனம் மற்றும் கார் இரண்டுக்கும் சேர்த்து 11000 ரூபாயும் பேக்கேஜ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

பெண்களுக்குப் பெண் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி வழங்கப்படும். பட்டியலின மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் ஆலோசித்து வருகிறோம். அதற்கான நடைமுறைத் திட்டங்களைச் சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஷெட்யூல் அடிப்படையில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி இயங்கும். கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களே பொதுமக்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்” என்றார்.

Ksrtc டிரைவிங் ஸ்கூல்

தொடக்கவிழாவில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார், “ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றவை. சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சிறந்த டிரைவிங் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 6 மாதங்கள் கடந்த பிறகு இந்தத் திட்டம் லாபமா, நஷ்டமா என்ற கணக்கை ஊடகங்கள் மத்தியில் தெரிவிப்பேன்” என்றார்.

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 22 மையங்களில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தப்படும் எனவும், உடனடியாக 14 மையங்களில் பயிற்சி தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.