பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், மோடியுடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அதில் புதிதாக தேர்வான எம்.பி-க்கள் பதவியேற்றனர். அதன்பிறகு நேற்று மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடந்தது.

ஓம் பிர்லா – பிரதமர் மோடி

இதில், இந்தியா கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சுரேஷை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று, பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் 3.0-வில் நாடாளுமன்ற முதல் கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாசித்து உரை நிகழ்த்தினார்.

அதன் ஹைலைட் விஷயங்கள் இங்கே..!

* உலகின் மிகப்பெரிய தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாகநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

* ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகளாக வாக்குப்பதிவு நடக்கவே இல்லை. கடந்த 40 ஆண்டுகால போராட்டத்துக்கு மத்தியில் ஜம்மு கஷ்மீரில் தேர்தல் நடந்த போது குறைந்தளவில் மட்டுமே வாக்கு பதிவானது. இந்தியாவின் எதிரிகள் அதை காஷ்மீரின் கருத்தாக, சர்வதேச மன்றங்களில் பிரசாரம் செய்தனர். ஆனால் இந்த முறை, ஜம்மு – காஷ்மீர் அத்தகைய அனைத்து பிரசாரத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

* மக்கள் மூன்றாவது முறையாக இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த அரசால் மட்டுமே அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் அறிவார்கள். 18-வது மக்களவை பல வழிகளில் வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை. இந்த மக்களவை அமிர்த காலின் ஆரம்ப ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

* இந்த மக்களவை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று 56 ஆண்டுகள் ஆகிறது என்பதற்கும் சாட்சியாக இருக்கும். வரும் கூட்டத் தொடரில், இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை இந்த அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால நோக்கத்தின் பயனுள்ள ஆவணமாக இருக்கும்.

* பெரிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகளுடன், பல வரலாற்று நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் காணப்படுகின்றன. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

பிரதமர் மோடி

* 10 ஆண்டுகளில், இந்தியா 11 வது இடத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இது சாத்தியமானது. இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15 சதவிகித பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு எனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

* பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு எனது அரசு ரூ.3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இதுவரை ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியா அதன் தற்போதைய தேவைகளை மனதில் கொண்டு, இந்திய விவசாயிகளுக்கு இந்த தேவையை பூர்த்தி செய்யும் திறனை வேகமாக அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்றம்

* அரசு இயற்கை விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டு சர்வதேச தினை தினத்தை கொண்டாடியுள்ளது.

சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு (பட்ஜெட்) ஒதுக்கீட்டை 4 மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளது. Act East Policy கொள்கையின் கீழ் இந்தப் பகுதியை மூலோபாய நுழைவாயிலாக மாற்ற அரசு செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பகுதிகளுக்கு அனைத்து விதமான இணைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மோடி

கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அமைதியின்மை உள்ள பகுதிகளில் AFSPA(Armed Forces (Special Powers) Act) பல்வேறு கட்டங்களாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

*நாட்டில் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகாரம் பெற்றால்தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். எனவே அவர்களுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அரசின் ஒவ்வொரு திட்டத்தின் பலன்களையும் அவர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். அரசு திட்டங்களில் இருந்து ஒருவர் கூட வெளியேறக்கூடாது என்ற மன உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து வெளியே வந்ததற்கு காரணம் அரசின் திட்டங்கள் தான்.

* மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு மலிவு விலையில் உள்நாட்டிலேயே உதவிக் கருவிகளை எனது அரசு உருவாக்கி வருகிறது. எனது அரசு தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது.

திரௌபதி முர்மு

* டிஜிட்டல் இந்தியா மற்றும் தபால் நிலையங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் அபியானில், ஏழைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தேசியப் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு முதல்முறையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் இன்று நாடு மகாத்மா காந்தியின் கட்டளைகளை உண்மையான அர்த்தத்தில் பின்பற்றுகிறது என்று உணரச்செய்கிறது.

*திறமையான இந்தியாவுக்கு, நமது ஆயுதப் படைகளில் நவீனத்துவம் அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* இந்த மனநிலையுடன், எனது அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. சீர்திருத்தங்களால், இந்தியா ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து ரூ.21,000 கோடியை தொட்டுள்ளது.

* 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

நாடாளுமன்றம்

* இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் ஒரு வழியை உருவாக்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலங்களின் வருவாய் அதிகரித்துள்ளது.

* நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போதிய வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்வது அரசின் தொடர் கடமையாகும் .சமீபத்தில் நடந்த தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு மாநிலங்களில் தேர்வுத்தாள் கசிவுகளை பார்த்திருக்கிறோம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதற்கு நாடு தழுவிய உறுதியான தீர்வு தேவை. தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்கியுள்ளது.

* இன்று நமது இளைஞர்கள் விளையாட்டிலும் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். எனது அரசாங்கத்தின் திறம்பட முயற்சியின் விளைவாக, இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில், சாதனை எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது, இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நினைத்து பெருமை கொள்கிறோம். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாதனைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகிறது.

* இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும் சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரும் அரசியலமைப்பின் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 1975 ஜூன் 25 அன்று அமல்படுத்தப்பட்ட அவசரநிலை அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய அரசியலமைப்பு சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றியைக் காட்டியது. எனது அரசால் இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

*நமது அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம், எனது அரசு நவம்பர் 26-ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. நமது ஜம்மு காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுவிதமாக இருந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் `மணிப்பூர் மணிப்பூர்’ என முழக்கமிட்டனர். பாதுகாப்புத்துறை சீர் திருத்தம் குறித்து பேசும் போது `அக்னிவீர் அக்னிவீர்’ என முழக்கமிட்டனர். புதிய மருத்துவக்கல்லூரிகள் குறித்து பேசும் போது `நீட் நீட்’ என முழக்கமிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.