தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும், 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், `தி.மு.க நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி கனிமவள கொள்ளைதான்’ என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில், மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரியவந்தது. சட்டவிரோதமாக மணல் கொள்ளையடித்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழக அரசு, மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

அண்ணாமலை

தற்போது, அமலாக்கத்துறை, தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு (டி.ஜி.பி) எழுதிய ஜூன் 14 தேதியிட்ட கடித விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கடிதத்தில், சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில், கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில், மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை வைத்து சட்ட விரோதமாக மணல் அள்ளி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியிருக்கின்றனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களில், 190 ஹெக்டேர் அளவில், 28 பகுதிகளில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மணல் குவாரி

தெளிவான சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து மணல் அள்ளப்பட்டதற்கு முன்பாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட பின்பும் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், 273 மணல் இயந்திரங்களைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 நபர்கள், இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு அதில் யார்- யாருக்கு மணல் அள்ளவும், மணல் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அரசுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதையும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், மணல் ஒப்பந்ததாரர்களின் 130 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்களையும் முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின்

மேலும் மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கிக் கணக்குகளிலிருந்த, 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்கள். ஆனால், தமிழக அரசுக்குப் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, தி.மு.க அரசு இதுவரை, எந்த அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.