நாடு முழுவதும் கடந்த 5.5.2024 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை வெடித்தது. குறிப்பாக 67 பேர் நீட் தேர்வில் 720 / 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை கிளப்பியது. இதேபோல் 1,563 மாணவர்களுக்கு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெட் தேர்விலும் மோசடி நடந்ததாக பரபரப்பு கிளம்பியது. தற்போது இதேபோன்ற பிரச்னை நெட் தேர்விலும் நடந்திருக்கிறது. நாடு முழுவதும் கடந்த ஜூன் 18-ம் தேதி 2024-ம் ஆண்டுக்கான ‘யுஜிசி நெட்’ தேர்வை நடத்தியது, தேசிய தேர்வு முகமை. மொத்தமாக 317 நகரங்களில் 1,205 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முன்னதாக 11,21,225 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 9,08,580 பேர் எழுதினார்கள். மறுநாளே மத்திய கல்வி அமைச்சகம், “நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கிறது” எனக் கூறி அந்த தேர்வை ரத்து செய்தது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

சிபிஐ

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “டார்க் நெட்டில் யுஜிசி நெட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கசிந்துள்ளது. எனவே தேர்வை ரத்து செய்துள்ளோம்” என பதில் அளித்திருந்தார். இது நாடு முழுவதும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தன. அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க அரசின் அதிகார வர்க்கமும் ஊழலும் இளைஞர்களுக்கு ஆபத்தானவை. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகச் செய்திகள் வெளியானதை அடுத்து, தற்போது நெட் தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தனப் போக்கிற்குக் கல்வி அமைச்சர் பொறுப்பேற்பாரா?” எனக் கொதித்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “பா.ஜ.க ஆட்சியில் ஒவ்வொரு தேர்விலும் முறைகேடுகள் நடக்கிறது. இது நாட்டுக்கு எதிராக யாரோ செய்யும் பெரிய சதியாகவும் இருக்கலாம்” என வெடித்திருக்கிறார்.

இந்த சூழலில் கேரள சட்டப்பேரவையில் நீட் மற்றும் நெட் முறைகேடு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது, ‘நீட் தேர்வு 24 லட்சம் குடும்பங்களின் கனவு. அதனை தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் சிதைத்துவிட்டது. பல ஆண்டுகள் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து எழுதிய நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றம். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்குக் கூடுதல் பொறுப்பாகத் தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகள், மாணவர்களின் கடும் எதிர்ப்பால் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி நீட் போன்ற தேர்வுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குளறுபடிகள் | NEET

மறுப்பக்கம் நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் தின்தோறும் வெளியாகும் தகவல்கள் தலையை சுற்ற வைக்கிறது. அதாவது ‘வாட்ஸ்அப், டெலிகிராம்’ செயலிகளில் ரூ.5,000-க்கு நெட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்கு ‘நெட்’ தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்கச் சென்றிருக்கிறது, சிபிஐ அதிகாரிகள் குழு. அப்போது காசியாதீஹ் என்ற கிராமத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதில் கடுப்பான மக்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 16 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சால்வர் கேங்க்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பிரியங்கா காந்தி

இதுகுறித்து பேசும் விவரப்புள்ளிகள், “பல நுழைவுத் தேர்வுகளில் மோசடிகளில் ஈடுபட்ட ‘சால்வர் கேங்’ கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது. இவர்கள் தொடர்ச்சியாக நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை கசிய விடுவது, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்துதான் கும்பலின் முக்கிய புள்ளியான ரவி ஆட்ரி கைது செய்யப்பட்டார். இந்த கும்பலின் தலைவனாகக் கருதப்படும் பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் முக்கியாவுக்கு இதில் முக்கிய தொடர்பு இருக்கிறது. இவர்கள்தான் தேர்வுக்கு முன்பு வினாத்தாள்களை கசியவிட்டு பணம் பார்த்திருக்கிறார்கள். இதேபோல் வினாத்தாள் மோசடியில் பீகாரில் உள்ள நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சிங் என அழைக்கப்படும் சஞ்சீவ் முகியா முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவர் நாளந்தா கல்லூரியின் நூர்சராய் கிளையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகளில் தொடர்பு உள்ளது. ரவி அத்ரியும், சஞ்சீவ் முகியாவும் சேர்ந்துதான் ‘சால்வர் கேங்’ நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. முகியாவின் மனைவி மம்தா தேவி பூதகர், லோக் ஜனசக்தி கட்சியில் இருக்கிறார். பீகாரின் ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் தொடர்பான மற்றொரு தேர்வுத் தாள் கசிவு வழக்கில் அவரது மகன் சிவகுமார் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கும் இருக்கிறது. இதற்கிடையியல் முகியா நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.