`அடாவடி; ஆள் கடத்தல்; தற்கொலைக்குத் தூண்டுதல்’ – தென் மாவட்டங்களில் தொடரும் கந்துவட்டிக் கொடுமை!

கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி பலர் சொத்துகளை இழப்பதும், இன்னும் சிலர் தற்கொலை செய்கின்ற கொடுமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இக்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

சிவகாசியில் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் குடும்பம்

இதுமட்டுமன்றி, கடன் பெற்றவர்களை கந்துவட்டி கும்பல் கடத்தி துன்புறுத்துவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க 2003-ல் தமிழக அரசு கொண்டு வந்த கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாமலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாலும்தான் கந்துவட்டிக்காரர்கள் துணிச்சலாக செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரும் இந்த வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “நான் ஒருவரிடம் தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தேன். பிரச்னை எற்பட்டதால் என்மீது ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். கடந்த மே 29-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு சென்று, 10 நாள்களில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறிவிட்டு வந்தேன். ஆனால், ஜூன் 7-ம் தேதி 10 பேருடன் என் வீட்டுக்குள் அராஜகமாக நுழைந்து என்னை ஒரு அறையிலும், என் மனைவி, மைனரான மகளை தனித்தனி அறையிலும் அடைத்து வைத்து பணம் எங்கே என்று கேட்டார். ‘போலீஸில் உறுதியளித்ததுபோல நாளை கொடுத்துவிடுவேன்’ என்று சொன்னதற்கு, ‘அதெல்லாம் முடியாது இப்பவே பணத்தை எடுத்து வை’ என்று அசிங்கமாகத் திட்டியபடி கம்பியால் என் தொடையில் அடித்து கீழே படுக்கவைத்து காயம் ஏற்படும் வரை செருப்புக்காலால் மிதித்தார்கள்.

ஆள் கடத்தல்

காலை 7 மணி முதல் 10 மணி வரை சித்ரவதைக்கு பிறகு, நான் அவர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்து வைத்திருந்த 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் 5 பவுன் நகை, 3 செல்போனையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு, என்னுடைய காரில் மனைவி மகளை ஏற்றிக் கொண்டவர்கள், என் கண்களை கட்டி அவர்களுடைய காரில் கொண்டு சென்று, ஓரிடத்தில் நிறுத்தி கடுமையாக தாக்கினார்கள். மயங்கி விழுந்த என்னை கடுமையாக சித்ரவதை செய்து பின்பு அப்பல்லோ மருத்துவமனையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அதன் பின்பு ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்ததில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களை கைதுசெய்யவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளேன். தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்” என்றார்.

கோகிலா என்பவரின் நிலை மிக மோசமானது. “நானும் என் கணவரும் பாத்திரக்கடையில் வேலை செய்து வந்தோம். கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் வட்டிக்கு 30 ஆயிரம் ரூபாய் வாங்கினேன். பின்பு அதற்கு வட்டி கட்ட இன்னொருவரிடம் கடன் வாங்க என்று அப்படியே தொடர்ந்தது, அதன் பின்பு மைக்ரோ பைனான்ஸ்காரர்கள் நடத்திய சுய உதவி குழுக்களில் சேர்ந்து கடன் வாங்க, கடன் தொகை இன்னும் அதிகரித்தது. என் கணவருக்கு உடல் நலமில்லாமல் போனதால் வாரம்தோறும் எனக்கு கிடைக்கும் கூலிப்பணத்தை வட்டிக்கே கட்டி வந்தாலும் கடன் முடியவில்லை. கந்துவட்டிக்காரர்களும், மைக்ரோ பைனான்ஸ்காரர்களும் இரவு பகல் பாராமல் வீட்டு முன் வந்து சத்தம் போட்டு அசிங்கப்படுத்த ஆரம்பித்தார்கள்.

கோகிலா

இதனால் பிளஸ் டூ படித்து வந்த என் மகள் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்று, தெய்வாதீனமாக காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போதுகூட இரக்கமே இல்லாமல் ஆஸ்பத்திரி வாசலில் நின்று தவணைப் பணம் கேட்டார்கள். அதோடு போலீஸில் புகார் கொடுத்தோம். ரசீது மட்டும் கொடுத்தார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்.பி-யிடம் நான்குமுறை மனு கொடுத்துவிட்டேன். கடனை கட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை, எந்த வழியும் இல்லாத எனக்கு கொஞ்ச நாள்கள் அவகாசம் கொடுங்கள் என்றும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்தாதீர்கள் என்றும்தான் கேட்கிறேன். எங்களால் நிம்மதியாக தூங்ககூட முடியவில்லை” என்றார்.

பெண்கள் எழுச்சி இயக்க வழக்கறிஞர் மகாலட்சுமி பேசும்போது, “கூலி வேலை செய்து பிழைத்து வரும் இவர், கொரோனா காலத்தில் வட்டிக்கு வாங்கி சிக்கிக்கொண்டார். இதுவரை அவர் செலுத்திய வட்டித்தொகையே அசலை விட பல மடங்கு இருக்கும். கொடுக்க வழியில்லாமல் இருக்கும் இவரை இரவில் வீட்டுக்கு சென்று டார்ச்சர் செய்வது சட்டவிரோதமானது. ஆர்.பி.ஐ நார்ம்ஸ்படி மைக்ரோ பைனான்ஸ்காரர்கள் நடந்துகொள்வதில்லை. அதிகமான வட்டி வாங்குகிறார்கள். 

வழக்கறிஞர் மகாலட்சுமி

கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத்தான் கந்துவட்டி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை காவல்துறையினர் நடைமுறைப்படுத்துவதில்லை. கந்துவட்டிக்காரர்களுக்கு உதவி செய்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலால் இவர் மகள் தற்கொலைக்கு முயன்றது குறித்து மதுரை ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்ததற்கே எந்த நடவடிக்கையும் இல்லை… மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கந்துவட்டிக்காரர்கள், மைக்ரோ பைனான்ஸ்காரர்களிடம் சிக்கி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார்.

இதுபோல் மதுரையின் பிரபல ஹோட்டல்காரர், தொழிலை விரிவுபடுத்த ஒரு லோக்கல் பைனான்ஸ் நிறுவனத்தில் சொத்தின் பேரில் 2 கோடி கடன் வாங்க, அதற்கு சில கோடி வட்டி கட்டி சொத்தை மீட்கச் சென்றபோது, அவரின் 6 கோடி ரூபாய் சொத்தை தன்வசமாக்கி கொண்டிருக்கிறார் அந்த பகாசுர பைனான்சியர். போலீஸ், அது இதுவென்று எங்கெங்கோ சென்றும் எதுவும் நடக்காததால் புலம்பிக்கொண்டிருக்கிறார் அந்த ஹோட்டல்காரர்.

கடந்த மே 23-ஆம் தேதி சிவகாசி திருத்தங்கலில் வசித்த ஆசிரியர் தம்பதிகளான லிங்கம்-பழனியம்மாள் கந்துவட்டிக் கடன் சுமையால் திருமணமான மகள், பள்ளியில் படிக்கும் மகன், இரண்டு மாத பேத்தி ஆகியோரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் லிங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அப்போது போலீஸ் விசாரணையில் வட்டி கேட்டு டார்ச்சர் செய்வதாக சிலர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் 5 பேரும் உயிருடன் இருந்திருப்பார்கள். அந்த புகாரின் அடிப்படையில் அருண்குமார், கிருஷ்ணன், வி.முருகன், எஸ்.முருகன், மணிவண்ணன், ரமேஷ்குமார் ஆகியோர் மீது இப்போது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதனால் என்ன பலன் என்கிறார்கள் மக்கள்.

கந்துவட்டி

இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் கடந்த 6-ம் தேதி சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் அச்சகத் தொழிலாளி ஜெயச்சந்திரன் தன் மகளின் உயர்கல்விக்காக சிலரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்காக பல மடங்கு வட்டியை செலுத்தி வந்த நிலையில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு ராஜகுமாரி, குருவம்மாள், ஆறுமுகம் ஆகியோர் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு வந்து தொடர்ந்து டார்ச்சர் செய்ததால்  ஜெயச்சந்திரனின் மனைவி ஞானப்பிரகாசி, மகள் ஷர்மிளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கு காரணமான மூன்று பேரையும் போலீஸ் கைது செய்தது.

இப்படி பல சம்பவங்கள் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ரம்யா பாரதி

கந்துவட்டியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதையும், மதுரை ஒத்தக்கடை, சிவகாசி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கந்துவட்டி புகாருக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதியிடம் தெரிவித்தோம், “சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் குறித்தும், கந்துவட்டி புகார்கள் குறித்தும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb