‘மாநிலத்தில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே, பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன் அறிவுரை வழங்கினார், நவீன் பட்நாயக்.

சில நாட்கள் கழித்து, ‘பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்து, காங்கிரஸைத் தோற்கடித்து 2000 ஆம் ஆண்டில் ஒடிஷா மாநில ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக், 24 ஆண்டுகள் கழித்து அந்த பா.ஜ.க-விடமே தோற்க வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாக உள்ளூர் கட்சியைக் காலி செய்வதைத்தான் செய்துவருகிறது பா.ஜ.க. அப்படி சமீபத்திய பலி…. நவீன் பட்நாயக். இந்த விஷயம் இப்போது உறைக்க ஆரம்பித்திருப்பதால், பா.ஜ.க-வை ‘எதிரி’ என வெளிப்படையாகவே இப்போது அறிவித்திருக்கிறார் நவீன்.

கருணாநிதி , எம்.ஜி.ஆர் உடன் நவீன் பட்நாயக்

ஒருகாலத்தில் நகமும் சதையுமாக பா.ஜ.க-வுடன் இருந்த நவீன், பா.ஜ.க எதைச் செய்தாலும் ஆதரித்தவர்தான். இடையில், மாநில அளவில் பா.ஜ.க-வுடன் முட்டல் மோதல் ஏற்பட்டாலும், மத்திய அளவில் பா.ஜ.கவை ஆதரித்தே வந்தார் நவீன். அதிலும் 2014-ல் மத்தியில் மோடி அரசு அமைந்த பிறகு, மாநிலங்களவையில் அந்தக் கட்சிக்கு அத்தனை பலமில்லை. அதனால், மசோதாக்களை நிறைவேற்ற துணைநின்றவர் நவீன்தான். ‘இந்த மசோதா நாட்டுக்கே எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கடுமையாக எதிர்த்த மசோதாக்களையும், தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்து ஆதரவாக ஓட்டுப்போட வைத்து, பா.ஜ.க கொண்டு வந்த மசோதாக்களை வெற்றி பெறச் செய்ததில் நவீனுக்குப் பெரும்பங்கு உண்டு.

இப்படி பல வழிகளில் பா.ஜ.க அரசை ஆதரித்து வந்த நவீன், இப்போது அதே பா.ஜ.கவால் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்து நிற்கிறார். ஐந்து முறை முதல்வராக இருந்து அவர் கட்டிக் காத்த கட்சி, இப்போது கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது. தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்து, தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசுவதில் மும்மரமாகியுள்ளார் நவீன்.

இந்தச் சூழலில், வி.கே. பாண்டியன் பற்றி நிறையவே பேசியாக வேண்டும். ஆம், இந்த முறை நவீன் ஆட்சியைப் பறிகொடுத்த பின்னணியில், பாண்டியன் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் எனும்போது அதைப் பேசாமல் இருக்கமுடியாதுதானே?

முதல்வராக இருந்த நவீனுக்கு வலது கரமாக விளங்கிய வி.கார்த்திகேய பாண்டியன் என்கிற வி. கே. பாண்டியன், ஒடிஷா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னணியில் இருப்பது… அநாகரிகமான தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பா.ஜ.க-தான்.

நவீன் பட்நாயக், வி.கே. பாண்டியன்

பா.ஜ.க-வின் வியூகம்!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், கடந்து ஏழு மாதங்களாகத்தான் அரசியல்வாதி. ”ஆறாவது தடவையாக நவீன் பாபு (நவீன் பட்நாயக்கை இப்படித்தான் அழைக்கிறார்) முதல்வராக ஆவார். அது நடக்காவிட்டால், அரசியலில் இருந்தே விலகுவேன்” என்று அறிவித்திருந்தார், பாண்டியன். ஆனால், இந்த பாண்டியனின் தமிழ் அடையாளமே பா.ஜ.க-வின் தேர்தல் துருப்புச்சீட்டாக மாறியது.

ஒடிஷா சென்ற நரேந்திர மோடி, வி.கே.பாண்டியன் தமிழர் என்பதை மனதில் கொண்டு, ’பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் நகைகள் இருக்கும் நிலவறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது’ என்று கிண்டலாகப் பேசினார்.

’தமிழர்களை திருடர்கள் என்று சொல்வீர்களா?’ எனக் கேட்டு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொந்தளித்தனர். பாண்டியனுக்கு எதிரான பா.ஜ.க-வின் பரப்புரை, ஒடிஷா மக்களிடையே இனவாதத்தைத் தூண்டிவிடவே, எதிர்பார்த்தது போலவே பா.ஜ.கவுக்கு அது சாதகமாக மாறியது.

என்ன அது 5T ?

பாண்டியனுக்கு தரப்பட்ட ’ 5T தலைவர்’ என்கிற பொறுப்பில் உள்ள ’T’, ஐந்து தமிழர்களைக் குறிக்கும் என்று பொய்யாக பரப்புரை செய்யப்பட்டது. அதென்ன 5T? வெளிப்படைத்தன்மை (Transparency), அணியாக உழைத்தல் (Teamwork), தொழில்நுட்பப் பயன்பாடு (Technology), உரிய கால அட்டவணைப்படி செயல்படுதல், (Time) ஆகிய 4ஜிக்களை பயன்படுத்தினால்… மாற்றம் (Transformation) உருவாகும் என்கிற வளர்ச்சிக் கொள்கையே 5டி கொள்கை.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாண்டியன் 2023 நவம்பரில் பதவி விலகி, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள 5T திட்டத்தின் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஒடிஷா அரசின் வளர்ச்சி குறித்த நோக்கத்தையும் அணுகுமுறையையும் விளக்கும் வகையில் இந்த 5டி திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இதைத்தான் திரித்து பா.ஜ.க பரப்புரை செய்தது.

V K Pandian – வி.கே.பாண்டியனுடன் நவீன் பட்நாயக்

’ஒடிஷாவில் விரைவில் தமிழர் ஆட்சி’ பா.ஜ.க ஊட்டிய இனவாதம்!

பிரதமர் மோடி தன் பரப்புரையில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமாக இருக்கிறது எனக்கூறி, அவருக்குப் பின்னர் ஆட்சியை, அவரது வலதுகரமான பாண்டியன் அபகரித்துக் கொள்வார் எனும்விதமாக, ’கூடிய விரைவில் தமிழர்களின் ஆட்சி’ என்ற பொய் பரப்புரையையும் செய்தார். ஒரு பிரதமரே முன்னின்று இதைச் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிஷா தேர்தல் களம் திசை மாறியது.

ஜெகந்நாதர் கோயில் சாவி சர்ச்சை!

’ஜெகந்நாதர் கோயில் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டது’ என்ற பா.ஜ.கவின் குற்றச்சாட்டுக்கு வி.கே.பாண்டியன், ’ரத்னாபண்டாரில் பூரி ஜெகந்நாதரின் பொக்கிஷ நிலவறைகள் இரண்டு உள்ளன. உள் அறை 40 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை. திருவிழாக் காலத்தில் நகைகளை எடுப்பதற்காக வெளி அறை திறக்கப்படும். மூன்று பேர் முன்னிலையில் அது திறக்கப்படவேண்டும். பூரி கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி, சேவைப் பணியாளர், அரசு நிர்வாகப் பிரதிநிதி ஒருவர் – இவர்கள் முன்னிலையில்தான் பலர் சாட்சியாக இருக்கையில் வெளியறை திறக்கப்படும். வெளியறையைத் திறந்தால்தான் உள்அறையைத் திறக்க முடியும். அப்படியெல்லாம் சாவியை ஒருவர் எடுத்துக்கொள்ள முடியாது’ என்று விளக்கம் அளித்தார்.

பூரி ஜெகந்நாதர் கோயில்

”வளர்ச்சிப் பணிகள், வறுமை ஒழிப்பு, விளையாட்டுத் துறை பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் எல்லாம் சிறப்பாகச் செயல்படும் நவீன் பாபுவை குறை சொல்ல ஒன்றுமில்லை என்பதால், தேர்தல் காலத்தில் பா.ஜ.க. இப்படியான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. இது மிகவும் அநியாயமானது. ஒடிஷா மக்கள் இக்குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி அவரை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் பாண்டியன். ஆனால், பிஜு ஜனதா தளம் தோல்வியைத் தழுவ, அரசியலிலிருந்தே விலகிவிட்டார் பாண்டியன்.

’ஒடிஷாவும் நானும்!’

தேர்தலுக்குப் பின்னர், தோல்விக்குப் பொறுப்பேற்று அரசியல் விலகலை அறிவித்த வி.கே.பாண்டியன், “நான் ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவன். சிறிய கிராமத்திலிருந்து வந்தேன். சிறு வயதிலிருந்தே என்னுடைய இலக்கு ஐ.ஏ.எஸ். ஆகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதுதான். கடவுள் அதை நிஜமாக்கினார். ஒடிஷா மண்ணில் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து ஒடிஷா மக்கள் என் மீது அளவற்ற அன்பு செலுத்தினார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பாக, நவீன் பாபுவின் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கினேன். அவரோடு பணியாற்றியது என் பேறு. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரது அறம், தலைமைப் பண்பு, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு எப்போதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. என் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில்தான் முடித்தேன். அந்த அனுபவம், நவீன் பாபு பள்ளிகளை எவ்வாறு மாற்ற விரும்புகிறார் எனப் புரிந்துகொள்ள உதவியது.

நவீன் பட்நாயக்

சில விஷயங்களை நான் இப்போது தெளிவுபடுத்தி விடுவது நல்லது. எனக்கு எந்தப் பதவியின் மீதும் ஆசை கிடையாது. நான் நவீன் பாபுவிற்கு உதவவே வந்தேன். அதனால்தான் தேர்தலில் நிற்கவில்லை. மேலும் கட்சியில் எந்தப் பதவியிலும் நான் இல்லை. இந்தத் தேதி வரையிலும் என் தாத்தா, பாட்டி காலத்திய வீடு ஒன்றே என் சொத்தாக இருக்கிறது. ஆட்சிப் பணியில் சேரும்போது என்ன சொத்து வைத்திருந்தேனோ… அதேதான் இப்பொழுதும் என் சொத்து. ஒடிஷா மக்களின் அன்பையும் அவர்களிடத்தில் நற்பெயரையும்தான் நான் சம்பாதித்திருக்கிறேன்.

இனி அரசியலில் தொடரப் போவது இல்லை. இந்தப் பயணத்தில் எவரையாவது காயப்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பிஜு ஜனதா தளத்தின் பின்னடைவுக்கு என் மீதான் குற்றச்சாட்டுகள் காரணமாக இருந்திருக்கும்பட்சத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தொண்டர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்” என வி.கே.பாண்டியன் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

”தேர்தல் தோல்விக்காக பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளில் புயல், கோவிட் என பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவர் மிகவும் நேர்மையானவர்” என்கிறார் நவீன் பட்நாயக்.

வி.கே.பாண்டியனின் பயணம்!

மதுரை அருகேயுள்ள மேலூருக்குப் பக்கத்தில் உள்ள கூத்தன்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வி.கே.பாண்டியன். பள்ளிப் படிப்பை மதுரையிலும் நெய்வேலியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான அகாடமியில் முடித்துவிட்டு வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் பஞ்சாப் மாநிலத்தில்தான் முதன்முதலாக பணியில் அமர்ந்தார். ஒடிஷாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுஜாதாவை மணந்ததன் வாயிலாக ஒடிஷாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். ஒடிஷாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இருந்து பல மக்கள் நல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.

நவீன் பட்நாயக் – வி.கே.பாண்டியன்

பாண்டியன் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவதால் அவருக்கு ’அதிகாலை மனிதர்’ என்கிற பெயரும் உண்டு. மாரத்தான் போட்டிகளை நூறு மீட்டர் ஓட்டம் போல அநாயசமாக ஓடிக் கடப்பவர். ஒடியா மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர். இரண்டு குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு ஒடியாதான் தாய்மொழி.

நவீன் பட்நாயக்கின் தொகுதி அமைந்துள்ள கன்ஜம் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் பணியாற்றியபோதுதான் நவீன் பட்நாயக்கின் கவனம் அவர்மீது சென்றது. அதன்பின்னரே தனது தனிச் செயலராக அவரை நியமித்தார். நவீன் பட்நாயக்கிற்கு சோதனைக் காலம் வந்தபோதெல்லாம் அவரோடு உடன் இருந்து அவரைக் காத்தவர்; கட்சியையும் காத்தவர் வி.கே.பாண்டியன். குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு மகனைப் போல நவீன் பட்நாயக் உடன் நின்று அவரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தவர்.

திருமணமாகாத நவீன் பட்நாயக், வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து தன் தந்தைக்குப் பின் அரசியலுக்கு வந்தவர். குடும்பம் என்கிற ஒன்று அவருக்கு இல்லாததால், அவருக்கு நம்பிக்கையான ஒரு செயலாளர் தேவைப்பட்டார். அந்த இடத்தை நிரப்பிய பாண்டியன், அரசு நிர்வாகத்தில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். ஆனால், பா.ஜ.க இதையே வேறுவிதமாக, ‘நவீன் பட்நாயக்குக்குப் பின்னர் அவரது ஆட்சியை அபகரித்துவிடுவார் தமிழரான பாண்டியன்’ என்பதையே ஒடிஷா மக்களிடம் முதன்மை பரப்புரையாகச் செய்தது.

ஒடிஷாவும் தமிழ்நாடும்… நீண்ட பந்தம்!

நவீன ஒடிஷாவின் ஆட்சிப் பணி வரலாற்றில் தமிழர்களுக்கு எப்பொழுதும் தனியிடம் இருந்தது. 1950 முதல் 1980 ஆகிய 30 ஆண்டுக்காலத்தில் பி.சிவராமன், ராமநாதன், கே.ராமமூர்த்தி, வெங்கட்ராமன் போன்றவர்கள் தலைமைச் செயலாளர்களாக இருந்திருக்கிறார்கள். 1956 முதல் 1959 வரை பி.சிவராமன் தலைமைச் செயலாளராக இருந்தார்.

1961ல் பிஜூ பட்நாயக் முதலமைச்சரானவுடன் பி.சிவராமனை மீண்டும் தலைமைச் செயலாளராக நியமித்தார். ஒடிஷாவின் நடந்த புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில்தான் ’கே -பிளான்’ என்கிற காமராஜர் திட்டம் உருவாக்கப்பட்டது. பிஜூ பட்நாயக்தான் அத்திட்டத்தை எழுதினார். காமராஜர் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து அத்திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.

வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்

தமிழ்நாட்டு அரசியலை எப்போதும் கூர்ந்து கவனிப்பவராக இருந்தார் பிஜூ பட்நாயக். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. 1970களின் பிற்பகுதியில் தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் பிஜூ பட்நாயக். இதற்காக சென்னை வந்து கலைஞரையும் எம்ஜிஆரையும் சந்தித்தார். ஆனாலும் அவர் எண்ணம் நிறைவேறவில்லை.

27 ஆண்டுகள் கழித்து 1990-ல் மீண்டும் முதலமைச்சரானார் பிஜு பட்நாயக். அப்பொழுது, 27 ஆண்டுகளுக்கு முன்பு தலைமைச் செயலராக இருந்த பி.சிவராமனை தனது சிறப்பு ஆலோசகராக நியமித்துக்கொண்டார். 1990-ல் ஒரிசா மாநில நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக தமிழரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனனை நியமித்தார் பிஜு பட்நாயக். ஒரே ஆண்டில் அவருக்கு மேலாண்மை இயக்குநராக பதவி உயர்வு அளித்தார்.

நவீன் பட்நாயக் காலத்தில், 2014-ல் ஆர். பாலகிருஷ்ணனுக்கு முக்கியமான துறையான நிதித் துறையின் துணை தலைமைச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டது. பின் அவர் பணி ஓய்வு பெற்றாலும், 2018-ல் அவரை தலைமை சிறப்பு ஆலோசகராக பணிநீட்டிப்பு செய்து நியமித்தார்

பிஜூ பட்நாயக் எவ்வாறு தமிழ்நாட்டு அதிகாரிகளின் மீது தொடர்ந்து நன்மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தாரோ, அதே நம்பிக்கையை அவரின் மகன் நவீன் பட்நாயக்கும் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிவதனன் ஒடிஷா அரசில் நகர் மேலாண்மை, நிலமற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு நிலவுரிமை, வீட்டுரிமை, அதிநவீன குடிநீர் மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்தார். வி.கே.பாண்டியன், அரசு எந்திரத்தை திறம்பட செயல்படச் செய்தார். கோவிட் பெருந்தொற்றுக்காக ஒடிஷா மக்களில் ஒருவர் கூட, ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை; அனைத்தையும் அரசே ஏற்றது. 20 மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பியது ஒடிஷா. பிஜூ பட்நாயக் பெயரில் தொடங்கப்பட்ட சுகாதார அட்டை திட்டத்தின்படி நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒடிஷா மக்கள் சிகிச்சை பெறலாம். இதுபோல் பல திட்டங்களை அரசு சார்பில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதில் பாண்டியனுக்கு பெரும்பங்கு உண்டு.

நவீன் பட்நாயக்

’’தாங்கள் செய்ததைச் சொல்லி வாக்கு கேட்காமல், மதம், சாதி, மொழி பிராந்தியம் போன்ற விஷயங்களில் உணர்வுகளைத் தூண்டியது பாஜ.க’’ என்பது பாண்டியனின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதம். வழக்கமாக, எத்தனை கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் அதன் இறுதிக் கட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்தப்படும். ஆனால், இந்த முறை முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது. இறுதிக் கட்டத்தில் ஒடிஷாவுக்குத் தேர்தல். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலையொட்டி 8 முறை வந்தார்.

ஒடிஷா தேர்தல் பரப்புரையில், வி.கே. பாண்டியனின் தமிழ் அடையாளம் பற்றிப் பேசினார் பிரதமர். அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிப்பதாக அமைந்தது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்வினை வருமென்றும், கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் தமிழ்நாட்டில் கிடைக்காமல் போய்விடும் என்பதும் பா.ஜ.கவிற்குத் தெரியும். அதனால்தான், பிரதமரின் திட்டத்தின்படி அவர் முதலில் தமிழ்நாட்டில் பரப்புரை செய்து அங்கு தேர்தல் முடிந்தவுடன், ஒடிஷாவிற்கு வந்து இப்படியொரு பரப்புரை செய்யவேண்டும். அதன்படியேதான் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டிலும் இறுதிக் கட்டமாக ஒடிஷாவிலும் நடந்தது. ஆம்… பா.ஜ.க நினைத்ததே நடந்தது ஒடிஷாவில்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.