கள்ளச்சாராய மரணம்: கல்வராயன் மலையைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

`கள்ளச்சாராய மலை’ என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை சுற்றுலாத் தளமாக மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ கடந்திருக்கிறது. நாட்டையே உலுக்கியெடுத்த இந்த விவகாரம், தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களே தமிழக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கொ.ம.தே.க தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியை ஒதுக்கி அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு அரசு முன்வருமா… இன்றைக்கு கல்வராயன் மலையை கள்ளசசாராய மலை என்று அழைக்கும் நிலை இருக்கிறது. அதை மாற்றி மக்கள் பயணிக்கின்ற, பயன்படுத்துகின்ற வகையில் ஓர் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். அதிகமான மக்கள் வந்துசென்றால் கள்ளச்சாராயம் போன்ற குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும். எனவே, கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்குவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வருவாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். அந்த இடத்தை மேம்படுத்துவது என்பது அவசியம். அரசின் நிதிநிலைமைக்கேற்ப முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று, கல்வராயன் மலையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்!” என உறுதியளித்திருக்கிறார். இந்த நிலையில், கல்வராயன் மலை சுற்றுலாத்தளமாக மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

அமைச்சர் ராமச்சந்திரன்

கிழக்குத் தொடர்ச்சி மலையான கல்வராயன் மலை இயற்கையாகவே மரங்கள் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கின்றது. இது விலங்குகள் போன்ற வன உயிரினங்களுக்கு வசதியாக இருக்கிறதோ இல்லையோ, சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு சகல வசதிகளுடன் திகழ்கிறது. குறிப்பாக, இந்த கள்ளக்குறிச்சி மலையடிவாரங்களில்தான் கள்ளத்தனமாக சாராய ஊறல்கள் அமைக்கப்பட்டு, கள்ளச்சாராயம் காய்ச்ச்சி விற்பனை செய்யப்படுகின்றன. இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாகவே சட்டவிரோதமாக கள்ளச்சாராயங்கள் காய்ச்சப்பட்டு லாரி டியூப்கள், வாகனங்கள் மூலமாக சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. குறிப்பாக, இந்த கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களையும் இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியான இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து எளிதாக கள்ளச்சாராயத்தை சமூக விரோதிகளால் கடத்தி கொண்டுசெல்லமுடிகிறது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், திம்மாபுரம், கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருமந்துறை, கோட்டப்பட்டி, ஏ.கே.தண்டா, சிட்லிங், நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழ்நாடு-பாண்டிச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சர்வசாதாரணமாக கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு படு ஜோராக விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல் போலி மதுபானங்களும் இந்த மலைப்பகுதிகளில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கள்ளச்சாராய கோஷ்டிகளுடன் தமிழ்நாடு காவல்துறையினர் பலரும் கூட்டு சேர்ந்திருப்பதால் இத்தனையாண்டுகளாகியும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய புழக்கத்தை முழுவதுமாக அரசால் தடுத்த நிறுத்தமுடியவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், புதிய முயற்சியாக ஏற்கெனவே சாதாரணமான சுற்றுலாத்தலமாக இருக்கும் கல்வராயன் மலையை மேம்படுத்தி ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகராக மக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு சுற்றுலாத்தலமாக மேம்படுத்தினால் இந்த சமூக விரோத செயல்பாடுகளைத் தடுக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிக்கும் போது, காவல்துறை, வனத்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனைகள் மற்றும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும். இதனால் குற்றச்செயல்கள் கூடுமான அளவுக்கு குறையும் என்பதால் சமூக ஆர்வலர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கோமுகி அணை

இயல்பாகவே கல்வராயன் மலையில் நீர்வீழ்ச்சிகள், நீரோடை, ஆறுகள், ஏராளமான மரங்கள், அரியவகைத் தாவரங்கள் பறவைகள் விலங்குகள் என காடுகளுக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, கோமுகி அணை, மேகம் நீர்வீழ்ச்சி மற்றும் மலையடிவாரத்தில் உள்ள பெரியாறு நீர்வீழ்ச்சி ஆகியவை கோடைக்காலத்தில் குளிர்ச்சியையும், அதன் மலர் மணம் கொண்ட தண்ணீர் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன. முக்கியமாக, ட்ரெக்கிங், சாகசப் பயணங்கள், மலையேற்றம் செய்பவர்களுக்கு கல்ராயன் மலை வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இந்த மலைகள் மிதமான காலநிலையுடனும் அமைதியான சூழ்நிலையுடனும் இருப்பதால் சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்லாமல் தொலைதூர சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. எனவேதான் இந்த மலையை `ஏழைகளின் மலை பிரதேசம்’ என்று அழைக்கிறார்கள்.

கல்வராயன் மலையை மையமாக வைத்து நடக்கும் இந்த `மரண’ வியாபாரத்தை தடுத்து, அங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.

இந்த மலைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தினால் குற்றச்செயல்களை தடுப்பதோடு, சுற்றுலாத்துறைக்கு கணிசமான வருவாயையும் ஈட்டிக்கொடுக்கும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb