கோவை: துப்பாக்கியுடன் பிடிபட்ட ரெளடி கும்பல் – விசாரணையில் பகீர் தகவல்..!

கோவை, சொக்கம்புதூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த  சஞ்சய் குமார் என்கிற செவிட்டு சஞ்சய்,

கோவை

தீத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன்,  இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்கிற சரவணக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே ரெளடி கும்பலைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து காவல்துறை ஒரு கை துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் பிரபல ரெளடி சஞ்சய் ராஜாவின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆவாரம்பாளையம் பகுதி அருகே கடந்தாண்டு பசுபதி பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராஜா கோவை மத்திய சிறையில் உள்ளார். இருப்பினும் அவரின் ஆள்கள் வெளியில் நடமாடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கும்பலுக்கு இடையூறாக பொன்குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கடத்திச் சென்று கொலை செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரெளடி சஞ்சய் ராஜா

இதுதொடர்பாக செல்வபுரம் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.  இவர்கள் மீது கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.