செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் எனப் பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது.
ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்துகொள்ளவும் செய்கின்றன.
இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பதுபோல் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுபோன்ற அட்வான்ஸ் ரோபோட்களைத் தயாரிப்பதில் ஆரம்பத்தில் சில சவால்களை நிறுவனமும் இன்ஜினீயர்களும் எதிர்கொண்டுள்ளனர். அதன் பேட்டரி, மனிதர்கள் போன்ற வளைந்து கொடுக்கக்கூடிய தன்மைகள், அசைவுகள் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இந்த பொம்மையைத் தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன் எடையை 40 கிலோவில் இருந்து 29 கிலோவாகக் குறைத்துள்ளனர். 2023 ஜூலை மாதம் பொம்மையை 172 சென்டி மீட்டர் உயரத்திலும், எடையை 29 கிலோவிலும் வடிவமைத்தனர்.
இந்த செக்ஸ் பொம்மைகளை எளிதாக வாங்கும் வகையில் அதன் விலையையும் குறைத்துள்ளனர். தற்போது இந்த பொம்மை 1.2 லட்சம் ரூபாய்க்கு (1,500 அமெரிக்க டாலர்) விற்கப்படுகிறது. அமெரிக்காவில் அபிஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இது போன்ற பொம்மைகள் 5 லட்சம் ரூபாய்க்கு (6,000 அமெரிக்க டாலர்) விற்கப்படுகின்றன.
ஆனால், இந்தப் பொம்மைகள் வெறும் பாலியல் தேவையைத் தாண்டி, 2025-ம் ஆண்டுக்குள் வீட்டு வேலைகளைச் செய்யும்படியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக் கூடியவையாகவும், வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளவும் உருவாக்கப்பட உள்ளன.
2030-ம் ஆண்டுக்குள், ஆபத்தான வேலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ரோபோக்கள் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்டார்பெர்ரியின் சிஇஓ இவான் கூறுகையில், “பயனர்களுடன் உடல் ரீதியாகப் பேசவும், தொடர்புகொள்ளவும் கூடிய அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மையை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் எங்கள் முன்மாதிரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதுதான் என்றாலும், இது பாதகத்தை ஏற்படுத்துவதாக பலர் மனம் வருந்தியுள்ளனர். இது போன்ற செக்ஸ் ரோபோக்கள் ஒருவரின் சம்மதமின்றி உறவு கொள்ளும் (consent) தீங்கான மனப்பான்மையை வலுப்படுத்தலாம். அதோடு உணர்ச்சி மற்றும் பாலியல் தேவைக்காக இவற்றை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உண்டாகி, பலர் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.