சென்னை, தமிழ்நாடு – வண்டலூர் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இங்கு முன்னணி பிளைவுட் தயாரிப்பு நிறுவனமான ஷரான் பிளை, அதிநவீன ‘ஆர் ஓ குடிநீர்’ அமைப்பை நிறுவியதன் மூலம் குறிப்பிடத்தக்க பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான (CSR) பங்களிப்பை தொடங்கியுள்ளது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆர் ஓ அமைப்பு ஒரு மணி நேரத்துக்கு 1000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இது வண்டலூர் உயிரியல் பூங்காவின் 50 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. மீதமுள்ள குடிநீர் தேவையை அங்கு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஆர் ஓ அமைப்பு பூர்த்தி செய்து வருகிறது. இந்த முன்னெடுப்பின் மூலம் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை ஷரான் பிளை உறுதி செய்திருக்கிறது.
ஆர் ஓ அமைப்பு மூலம் வெளியேற்றப்படும் தேவையற்ற தண்ணீர், பூங்காவில் உள்ள மரங்களுக்கும், கழிவறை பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தும் விதமாக அங்குள்ள சேகரிக்கும் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. அதன் மூலம் தண்ணீர் அங்குள்ள மரங்களுக்கு சென்று சேரும்படியான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட ஆர் ஓ குடிநீரை பார்வையாளர்கள் எளிதாக பெறுவதற்காக, உயிரியல் பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே இருக்கும் வகையில் 12 குடிநீர் விநியோக குழாய் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஷரான் பிளை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் கூட்டு முயற்சி இந்த முன்னெடுப்பை தாண்டியும் நீண்டது.
ஷரான் பிளை பல ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு உகந்த மக்கக் கூடிய பைகளை உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவின் வளாகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்கள், கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதைத் தடுப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைப்பதை ஊக்கப்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் ஷரான் பிளை மிகுந்த உறுதியோடு செயல்பட்டுவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை துண்டாக்கும் இயந்திரங்கள் ஷரான் பிளையினால் நிறுவப்பட்டதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகளின் நலனில் ஷரான் பிளை கொண்டுள்ள அக்கறையின் ஒரு பகுதியாக, கோடைக் காலங்களில் தண்ணீர் வைக்கும் சிமெண்டு கிண்ணங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பறவைகள் மற்றும் தெரு விலங்குகளுக்கு தண்ணீர் வழங்குவதை ஷரான் பிளை ஊக்குவிக்கிறது.
ஷரான் பிளை கொடுத்துவரும் தொடர்ச்சியான ஆதரவுக்காகவும், வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள முக்கியமான தேவைகளை நிறைவேற்றியதற்காகவும், வண்டலூர் பூங்கா நிர்வாகம் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. ஆர் ஓ குடிநீர் அமைப்பு நிறுவப்பட்டது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பில் ஷரான் பிளை கொண்டுள்ள அர்பணிப்புக்கு மேலும் ஒரு சான்றாகும்.