“டாஸ்மாக்கிலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது..!” – குற்றம்சாட்டும் திருமாவளவன்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 60-ஐ தொட்டிருக்கும் சூழலில், முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் `மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாரய புழக்கம் அதிகரிக்கும் என்ற கருத்தை ஏற்க முடியாது” என ஆவேசமாக பேசினார் திருமாவளவன்.

கள்ளக்குறிச்சி நகரின் ஒரு பகுதியான கருணாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்தோர் எண்ணிக்கை 60-ஐ தொட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் சிகிச்சையிலும், ஏறத்தாழ 20 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி  இதுவரை 15க்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க  `முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்` எனக் கோரிக்கையுடன் ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதற்கிடையில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ் பாலாஜி மற்றும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதவ் அர்ஜூனா மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளாக சி.பி.ஐ-யின் மு.வீரபாண்டியன் மற்றும் சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வள்ளூவர் கோட்டத்தில், “தமிழ்நாடு அரசே! முழு மதுவிலக்கை அமல்படுத்து, மதுக்கடைகளை இழுத்து மூடு!’ என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் அதிக கவனம் ஈர்த்தது. மேலும் அதில் கையெழுத்திட்டு ஆர்ப்பாட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார் திருமாவளவன். அதை தொடர்ந்து முழு மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி 5 லட்சம் பெண்களை திரட்டி மாபெரும் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.

ஆளூர் ஷாநவாஸ்

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பேசிய வி.சி.க எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், “தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றும் பல விவகாரங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு பிரசாரம் இன்று இந்தியா முழுக்க ஒலிக்கிறது. அதைபோலவே முழு மதுவிலக்கை கொண்டு முன்மாதிரியாக மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசியவர் “வி.சி.க கொடி ஏற்றினாலே வந்து நிற்கும் போலீஸுக்கு கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியாதா?” என வினவினார்.

திருமாவளவன்

ஆர்ப்பாட்ட நிகழ்வில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் “நச்சு சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்தன் அடிப்படையில் சொல்கிறேன். கள்ளச் சாராயத்தை ஒழிப்பது அல்ல சாராய கடைகளை மூடுவதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே தமிழ் நாடு அரசே பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்து என்று கூறினாலும், தேசிய கொள்கையாக மது விலக்கை நடைமுறை படுத்த வேண்டும் எனவும் கோரினார், மேலும், `சாராயம் என்பதே கேடுதான் அரசு விற்றால் மட்டும் நல்ல சாராயம் ஆகிவிடுமா?’ என வினவினார்.

கள்ளக்குறிச்சியில் திருமாவளவன்

தொடர்ந்து பேசியவர், `மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் எனச் சொல்வதை ஏற்கவே முடியாது. குற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும் தடுப்பதற்குரிய நடவடிக்கை செய்வது தான் அறம். அரசு நடத்தும் டாஸ்மாக்கில் டாஸ்மாக்கில் மதுபானத்தில் `சீல்’-ஐ உடைத்து விட்டு அதில் கள்ளச்சாராயத்தை கலந்து விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் இதனை செய்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை முழு மதுவிலக்குதான். இன்னும் சொல்லப்போனால் தேசம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவால் மனிதவளமே பாழாகிறது” என ஆவேசமாக பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88