சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்… ரூ. ஒரு லட்சம் மானியம், ஜிபிஎஸ் கருவி!

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானியக் கோரிக்கையில், அமைச்சர் கீதா ஜீவன் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சென்னையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கிலும், பெண்களில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் மானியத்தில், 200 பிங்க் ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பயணம் செய்ய வேண்டிய சூழலில், அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த ஆட்டோக்களில், பெண்களுக்கான இலவச ஹெல்ப்லைன் நம்பர் ஒட்டப்படுவதோடு, ஆட்டோக்களின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களால் இயக்கப்படும் இந்த பிங்க் ஆட்டோக்களின் சேவையை, சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பெறலாம். வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற, விருப்பமுள்ள பெண்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆட்டோ வாங்குவதற்கு செலவிடும் மொத்த தொகையில், தமிழக அரசின் மானியமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலதிக கடன் உதவிக்காக, தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டம்

தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தனிநபர் வருமானம் ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது, இது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், சத்தியவாணிமுத்து நினைவு இலவச தையல் இயந்திரம் திட்டம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும்.