மதுரை: `சட்டவிரோத செயலால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு’ – கவுன்சிலர்கள் மீது பாஜக வழக்கறிஞர் புகார்

“மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்களின் சட்ட விரோத செயல்களால், மதுரை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது…” என்று பாஜக வழக்கறிஞர், கலெக்டரிடம் கொடுத்த புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டரிடம் புகார் அளித்த வழக்கறிஞர் முத்துக்குமார்

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார், மதுரை கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்திருக்கிறார். அதில், “மதுரை மாநகராட்சியில் கட்டடம் கட்டுவதற்கு கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போது மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சதுர அடி அளவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு மேல் கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்தான் அனுமதி அளிக்கவேண்டும். மேலும், உள்ளூர் திட்ட குழுமத்திலும் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இத்தகைய கட்டட வரைபட அனுமதி விஷயத்தில், ‘மதுரை மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக்குழு’ என்ற பெயரில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தலையிட்டு விதிமுறைகளை மீறி, வரைபட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிப்பதால் மதுரை மாநகரம் ஆபத்தான, அபாயகரமான நகரமாக மாறி வருகிறது. மாநகராட்சிக்கு அதிகமான வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

மாநகராட்சியிடம் கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய அளவுகளில் கட்டடம் கட்ட மாநகராட்சியால் அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் வரைபட அளவு அனுமதியை மீறியும், விதிமுறைகளை மீறியும், உரிய பார்க்கிங் வசதி, போதிய இடைவெளி, அவசர வழி இல்லாமல் மிக நெருக்கமாக கூடுதலான மாடி கட்டடங்களை கட்டி விடுகிறார்கள்.

இப்படி விதி மீறி கட்டடம் கட்டியதற்காக மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்புகிறது. இவற்றை தெரிந்துகொண்ட கட்டட உரிமையாளர்கள் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், ஒழுங்கு படுத்தி தருவதற்கு மாநகராட்சி ஆணையாளரிடம் பெயரளவிற்கு விண்ணப்பித்து விட்டு, கவுன்சிலர்கள் இடம்பெற்றுள்ள ‘மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக் குழுவிடம்’ மேல்முறையீடு செய்கின்றனர். அந்த நிலைக் குழுவில் உள்ள 10 கவுன்சிலர்கள் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்தால் வருங்காலத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொள்ளாமல் குறைந்தபட்ச அபராதத் தொகையை நிர்ணயித்து, விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு அனுமதி வழங்கி விடுகிறார்கள்.

மதுரை மாநகராட்சி

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவில் நிலைக்குழு தலையிடுவதற்கு மாநகராட்சி விதிகளில் இடமில்லை. வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்து மனுவின் மீது முப்பது நாட்களுக்குள் எவ்வித உத்தரவும் ஆணையாளரால் பிறப்பிக்கப்படவில்லையென்றால் மட்டுமே மாநகராட்சி நிலைக் குழுவில் மேல்முறையீடு செய்ய மாநகராட்சி சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் விதிமுறையையும், வரைபட அனுமதியை மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி, கட்டடம் செயல்பட தடை விதித்து, பூட்டி சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தபோதும் அதில் தலையிட்டு விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க, மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக் குழுவிற்கு அதிகாரம் கிடையாது.

இது முற்றிலும் மாநகராட்சி விதிமுறைகளை மீறிய செயலாகும். இது போன்று மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரதிபலன் பெற்ற மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்களின் இத்தகைய சட்ட விரோத செய்கைகளால் மதுரை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

முத்துக்குமார்

ஆகவே, பொது மக்கள் நலன்மீது அக்கறை கொள்ளாமல் பிரதிபலன் பெறுவதற்காக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்கிய நிலைக்குழுவினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகி வழக்கறிஞர் முத்துக்குமார் பேசும்போது, “மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து சட்ட விரோதமாக அனுமதி அளிப்பது மாநகராட்சி கமிஷனரின் நடவடிக்கைகளை முற்றிலும் முடக்கும் செயலாகும். விதிமுறை மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் செயல்பட்டு மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர். ஆகவே அத்தகைய கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடருவேன்” என்றார்.