கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் ஆணையமும், சிபிசிஐடி குழுவும் விசாரணைக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இந்த வழக்கை முழுமையாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இத்தகைய சூழலில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விடியா தி.மு.க ஆட்சியில் இது இரண்டாவது கள்ளச்சாராய சம்பவம். ஏற்கெனவே விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின் இனி கள்ளச்சாராயம் இருக்காது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்.

தற்போது இந்த சம்பவத்தில், கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில், காவல் நிலையத்துக்கு 300 அடி தூரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே நீதிமன்றமும் இருக்கிறது. ஆளுங்கட்சியின் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. தி.மு.க-வின் பெரும்புள்ளிகள் தங்களின் ஆட்சி அதிகாரத்தை வைத்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சி தரப்பினரை காவல்துறை விசாரித்தால் இதில் நீதி கிடைக்காது.
ஏற்கெனவே, விழுப்புரம், செங்கல்பட்டு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. தற்போது, தனிநபர் ஆணையமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனாலும் நீதி கிடைப்பது சந்தேகம்தான். எனவே, இதில் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். கல்வராயன் மலையில் வனத்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சியிருக்க முடியாது. அவர்களையும் விசாரணைக்குப்படுத்த வேண்டும்.

இது உளவுத்துறைக்கு ஏன் தெரியவில்லை என்பதுதான் சந்தேகம். உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டதா… இன்று 60 பேர் உயிரிழந்திருப்பதற்கு முழு காரணம் பொம்மை முதல்வர் ஸ்டாலின். எனவே, கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குத் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதைத்தான், ஆளுநரைச் சந்தித்து என்னென்ன நடந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி மனு அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88