டெல்லியில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. அதனால், வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீருக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் லாரிகளை தேடி வலம்வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தண்ணீர் சரியான முறையில் கொடுக்காததே டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என டெல்லி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், யமுனை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் அளவை குறைக்கும் ஹரியானா அரசை கண்டித்து, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தப் போராட்டம் குறித்து நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த உண்ணாவிரதம் என் உடலில் நீண்டகால எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது என் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் எச்சரித்தனர்.
எனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், என் உடல் எவ்வளவு வலியை அனுபவித்தாலும், உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற எனது தீர்மானம் உறுதியானது. 28 லட்சம் டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத வரை, எனது காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 5-வது நாளை எட்டிய நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த சர்க்கரை அளவு மிகக் கடுமையாக குறைந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், “அதிஷி ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டதால், தண்ணீருக்காக காலவரையற்ற உண்ணாவிரதத்தை நாங்கள் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வேறு வழிகளில் போராட்டத்தை தொடர்வோம். டெல்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து பரிசீலிக்குமாறு பிரதமருக்கு கட்சி சார்பில் கடிதம் எழுதுவோம்” என்றார்.