“என் தாத்தா காலத்துத் தொழில்; எங்க ஊருல நிறைய பேரு படிப்புனால வளரணும்..” – ஒப்பாரி கலைஞர் மகேஷ்

பொதுவாகவே நமது ஊர்களில் வாய்மொழியாகப் பாடப்படும் நாட்டார் பாடல்கள் மக்களுடைய எல்லா நிலைகளையும் பதிவு செய்பவையாக இருந்து வருகின்றன.

இந்தப் பாடல்கள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியவையாகவே இருக்கின்றது. ஒருவர் இறந்தபின்னே பாடப்படும் ஒப்பாரிப் பாடல் என்பது வயது மூத்த பெண்களால் இறந்தவரின் பெருமைகளைப் பற்றிப் பாடப்படுவது. இப்போது ஒப்பாரிப்பாடும் பெண்கள் குறைந்துவிட்டது. அதேநேரம் ஒப்பாரி பாடுவதற்கான ‘ஒப்பாரி கலைக்குழுக்கள்’ அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலியில் பல வருடங்களாக இயங்கி வரும் தேவர்குளம் ஒப்பாரி கலைக்குழுவைச் சேர்ந்த மகேஷிடம் பேசினோம்.

ஒப்பாரி கலைஞர் மகேஷ்

இதுதொடர்பாக பேசிய அவர், “நான் பி.எஸ்.சி.ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்கிறேன். எங்க வீட்டில் நாலும் பசங்கதான். நான்தான் மூத்தப்பிள்ளை என்றதால படிக்கும்போதே குடும்ப கஷ்டத்தினால் எங்கப்பா தொழிலுக்கே வந்துட்டேன். இந்த தொழிலை எங்க தாத்தா காலத்தில் இருந்தே பண்ணிட்டு வர்றோம். மாரியப்பன் கலைக்குழுவா ஆரம்பித்து 25 வருசம் ஆகிறது. ஆனால் இந்த தொழிலை 45 வருசமா செஞ்சிட்டு வருகிறோம். எங்க குழுவில் எட்டு பேர் இருப்போம். இரண்டு பேர் ஒப்பாரி பாடுகிறதுக்கும் நாலு பேர் மேளம் அடிக்கிறதுக்கும் மீதி இரண்டு பேர் ஆடுறதுக்குமா எட்டு பேர் இருப்போம்.

எங்க கூட திருநங்கைகளும் வருவாங்க. ஆனா சில வீடுகளில் திருநங்கைகளை வேணாம்னு சொல்லிடுவாங்க. அவங்களை சில இறப்பு வீடுகளில் கூப்பிடுற போது அவங்களை நாங்க கூட்டிட்டு போவோம். நான் தொழிலுக்குள்ள வரும்போது ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் சம்பளம் கிடைச்சது. இப்போ ஒரு வீட்டுக்கு போனோம்னா 15,000 ரூபாய் வரைக்கும் கொடுப்பாங்க‌. அதை நாங்க வண்டி வாடகை, சாப்பாடு போக எட்டு பேரும் பிரிச்சுப்போம். ஒரு நாளைக்கு எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும்.‌ எந்த இறப்பு வீடாக இருந்தாலும் சரி ஆண்கள் பெரிசா அழ மாட்டாங்க. மனசுக்குள்ளே வச்சிருக்குவாங்க.

ஒப்பாரி கலைஞர்கள்

ஆனால், பெண்களுக்கு வெளியூர்களில் கல்யாணம் பண்ணி கொடுக்கிறதனால பிரிஞ்சி இருப்பாங்க. அவங்க மனசுக்குள்ள நிறைய கஷ்டம் இருக்கும். பெண்கள்தான் அதிகம் ஒப்பாரியை விரும்புவாங்க. இந்தக் காலத்துல ஒப்பாரிங்கிறது மங்கிப்போயிருச்சு. ஒரு ஆளு இறந்துட்டாங்கன்னா அங்க போயிட்டு அங்க உள்ள பெண்கள்லாம் என்ன சொல்லி அழுகுறாங்களோ அதை வச்சிதான் நாங்க ஒப்பாரி வைக்கணும். நான் இந்த தொழிலுக்கு வரும்போது நாங்க போகுற இடத்துல எங்கயாவது அம்மா வயசில உள்ளவங்க இறந்து போனால் ஒப்பாரி பாடும்போது கண்ணீர் வரும். அதுக்கப்புறம் இதுதான் நமக்கு தொழில் என்கிறதால பழகிருச்சு. ஒரு இறப்பு வீட்டுக்கு போய் நாங்க பாடப்போறோம்னா அங்க இருக்கிற ஒவ்வொருத்தவங்க நிலையிலையும் எங்கள வச்சிதான் நாங்க பாட்டைப் படிப்போம்.

யார் இறந்தவங்களோ அவங்களோட அம்மா அப்பாவுல இருந்து அவங்க வம்சம் எல்லாம் கேட்குறதுக்கு முன்னாடியே பேசும்போதே என்ன சாதின்னு கேட்டுதான் பாட சரின்னு சொல்லுவோம். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமா பாட வேண்டிருக்கும். ஒவ்வொரு சாதிக்கும் சடங்கு முறைமைகள் இருக்கும். எந்த இறந்த வீட்டுக்கு போகும் பெண்கள் ஒப்பாரி பாட்டைத்தான் பாடச்சொல்லி கேப்பாங்க. நாங்க முதல்ல நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே விநாயகருக்கு வணக்கம் சொல்லிட்டுதான் தொடங்குவோம். சபையில இருக்கிறவங்களை வணங்கி ஒரு பாட்டை படிப்போம். அதுக்கப்புறம் ஒப்பாரிதான். யாரு நமக்கு குருவோ அவங்க எப்படி ஆரம்பிக்கிறார்களோ அப்படிதான் ஆரம்பிக்கணும்‌. ஒப்பாரிலயே தாயாருப்பாடல், மாரடிப்பாடல் , சோகப்பாடல், சாதிப் பாடல், தெம்மாங்குப் பாடல்ன்னு நிறையா இருக்கு.

ஒப்பாரி கலைஞர்கள்

ஒரு பொண்ணுக்கு அவங்க அப்பா இறந்துவிட்டாருன்னா அந்த பொண்ணு நிலையில இருந்து ஒரு ஒப்பாரி பாடுறேன் கேளுங்க என்றவர்,

“பவளமணி கட்டிலிலே….

பவளமணி கட்டிலிலே….

என்ன பெத்த அப்பா நீங்க கட்டிலிலே படுத்திருக்க

நீங்க படுத்து முழிக்கலியே

நீங்க படுத்து முழிக்கலியே

என்ன பெத்த அப்பா உங்களை பகவானும் அழைச்சிட்டானோ…”

“எனக்கு பாலு மிளகும் சர்க்கரையும்

பாலும் மிளகும் சர்க்கரையும்

என்ன பெத்த அப்பா நீங்க உயிரோட இருக்கும்போது எனக்கு வரிசை வரும் கப்பலில

நா வாழப்போன வாசலுக்கு வரிசை தரும் கப்பலில…

என் தகப்பனாரு இல்லாம என் அப்பா இல்லாம பெண்ணு மகளுக்கு வரிசை மறஞ்சிருச்சே

என் அப்பா இல்லாம நா பெண்ணுமக வடிக்கணுமா கண்ணீரை…”

என் பாட்டைக் கேட்டு அழாம இருக்கிற எல்லாரும் அழணும்.

அழ வைக்கிறதுதான் என்னோட வேலை எப்படிப்பட்ட வேலைன்னு பாத்தீங்களா.. எங்க குரூப்ல இருக்கிற பசங்களாம் வயசு பசங்கதான். ஒப்பாரி பாடுறதுல ஆர்வம் வந்து நிறைய பசங்க வர்றாங்க. யாரெல்லாம் வர்றேன்னு சொல்றாங்களோ அவங்கள எங்ககூட கூட்டிட்டு போயிடுவோம். அதைப் பாத்து பசங்க கத்துக்கிடுவாங்க.

ஒப்பாரி கலைஞர்கள்

எங்க வீட்டுல நான் இதுக்குள்ள வரவே கூடாதுன்னு சொன்னாங்க. இந்த தொழிலுக்குள்ள வராத எல்லாரும் கீழ்தரமா செத்த வீட்ல மேளம் அடிக்கிறவன், பாடுறவன்னு பேசுவாங்கப்பா இதுலாம் உனக்கு வேணாம்னு எங்க அப்பா சொன்னாரு.

ஆனா, ‘மேளக்காரங்கன்னு கீழ்தரமா பேசுனவங்க எல்லாரும் மேளக்காரங்களை உசத்தி பேசணும்’ அதுக்கு தான் இதுக்குள்ளயே இருக்கிறேன். அதை பேச வைக்கிறது தான் என்னோட ஆசை. என்னைப் பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம். இதுவரை நாங்க திருநெல்வேலி, தென்காசி சுத்தி தான் நிகழ்ச்சி பண்ணிட்டு வந்தோம். இப்ப மதுரை, கோயமுத்தூர் வரைக்கும் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப சந்தோசமா இருக்கு. நாங்க பாடுறதை வீடியோ எடுத்து யூடியூப்பில் போடுவோம். இப்போ ஒரு 1,68,000 சப்ஸ்கிரைபர் இருக்கிறாங்க‌.

ஒப்பாரி பாடிட்டு இருக்கும்போதே நிறைய பேரு வந்து குடிச்சிட்டு வந்து அதைப்பாடு இதைப்பாடுன்னு சொல்லுவாங்க. அதுக்கு ஏத்தப்படி சரிங்கண்ணா இதோ பாடுதோம்னு சொல்லி அவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு ஏத்தப்படி பாடி அவங்க மனசை குளிரவச்சிருவோம். ஒரு ஊருக்கு போய் பாடுறோம்னா வயசு பசங்க சாதிப் பாட்டை பாடச் சொல்லுவாங்க.

ஒப்பாரி கலைஞர்கள்

பெண்கள் வந்து ‘ஏய் என்னப்பா சாதிப் பாட்டே பாடிட்டு இருக்க. ஒப்பாரி பாட்ட பாடு’ ன்னு சொல்லவும் தாயாருப்பாட்டை பாட ஆரம்பிச்சிருவோம். இப்படி யாரு எப்படி விரும்புறாங்களோ அப்படித்தான் நாங்க எங்க நிகழ்ச்சியை நடத்துவோம்.

மாசத்துக்கு 20 நாள் வரைக்கும் வேலை இருக்கும். ஒரே நாளைக்கு இரண்டு மூணு வேலை வந்துச்சுனா அதை வேறொரு செட்டுக்கு நாங்க மாத்தி விட்டுருவோம். எங்களுக்கு நிரந்தரம் வருமானம்கிறது இருக்காது. தெம்மாங்கு படிப்போம் அது படிச்சிட்டு ஒப்பாரி படிப்போம். அதை முடிச்சிட்டு சாதிப் பாட்டை பாடணும். அப்படி‌ மாறி மாறி படிச்சா மட்டும் மக்கள் உட்கார்ந்து கேப்பாங்க.

எங்கக்கூட ராஜா ராணி ஆட்டம் ஆடுற பெண்களை கூட்டுட்டு போவோம். அவங்க இருந்தால் தான் தெம்மாங்கு பாட்டைப் பாடுவோம். சரிப்பா நம்ம அய்யாரு இறந்த வாசல்ல ஒப்பாரி படிச்சோம். இந்த ஆட்டக்காரப்பிள்ளையல் வந்துருக்கு ஒரு தெம்மாங்கு பாட்டைப் படிச்சிட்டு மறுபடியும் நிகழ்ச்சியை ஆரம்பிப்போம்னு சொல்லிவிட்டு கடைசியா தெம்மாங்கு பாடுறேன் கேக்குறீங்களா

“சால நல்லா கடந்து வாடி புள்ள

சந்தைப்பேட்டை தாண்டி வாடீ

ஓடை நல்லா கடந்து வாடி புள்ள

ஓடி போவோம் நம்ம தேவர் குளம்… “

ஒப்பாரி கலைஞர்கள்

இந்த பாட்டு அந்த பெண்ணை என் முறைக்காரியா (முறைப்பெண்) நினைச்சி கூப்பிடுற மாதிரிதான் பாடுவோம். இப்படி மாத்தி மாத்தி இரண்டு பேரும் பேசுற மாதிரிதான் தெம்மாங்கு பாட்டு இருக்கும்.‌ எங்க ஊரில் படிப்புனால பெரிசா வளர்ச்சி இல்ல. இதை நான் சொன்னாக்கூட நீயே படிச்சிட்டு ஒப்பாரிதான பாடுதன்னு சொல்லுவாங்க. என்னோட வீட்டுச் சூழல், இந்த கலை அதுக்குள்ள என்னை இழுக்கிட்டதால நான் வந்துட்டேன். எங்க ஊருல நிறைய பேரு படிப்புனால வளரணும்.” என்று மகேஷ்.

சமூக/பொருளாதார ரீதியாக முன்னேற படிப்பும் அதை சார்ந்த வேலையும் அத்தியாவசியமான ஒன்று. இவற்றை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.