திருச்சி: மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை! – நடந்தது என்ன?

திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், தஞ்சை சின்னக்கடை வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது: 48) என்கிற கைதி, திருட்டு வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாலும், தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்ததால், அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. அதன்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் சிறை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனை பார்த்த சக கைதிகள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

வெற்றிவேல் உடல்

அவர்கள் உடனடியாக வெற்றிவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து, அவர் உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில், வெற்றிவேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கே.கே நகர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக கைதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.