8 மாதங்களுக்கு பிறகு நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்… முக்கியமான பரிந்துரைகள் என்னென்ன?

53- ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22 அன்று நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் ஜூன் 13 அன்று தெரிவித்திருந்தது. அதன்படி ஜூன் 22-ம் தேதி அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா மற்றும் மேகாலயா முதலமைச்சர்கள், பீஹார், ஹரியானா, மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

ஜி.எஸ்.டி

2017- ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி திட்டம் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் காலாண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும். கடைசியாக அக்டோபர் 7, 2023 அன்று கூட்டம் கூடிய நிலையில், எட்டரை மாதங்கள் கழித்து ஜூன் 22-ம் தேதி அன்று இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நடைபெற்றது. இறுதியாக அக்டோபர் 7, 2023- ல் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள், மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றிற்கு 28% வரி விதிக்க ஜி.எஸ்.டி குழு முடிவு செய்தது. இதுகுறித்து மீண்டும் மதிப்பாய்வு செய்து அடுத்த கூட்டத்தில் பேசுவதாக கூறியிருந்தனர்.

ஜூன் 22 அன்று நடந்த கூட்டத்தில், “இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டத்தில் வர்த்தகத்தை எளிதாக்குதல், வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையை எளிதாக்குதல் போன்றவற்றைக் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

முக்கியமான பரிந்துரைகள்:

* சாமானிய மக்களுக்கு உதவும் வகையில், இந்திய ரயில்வே வழங்கக்கூடிய பிளாட்ஃபார்ம் டிக்கெட், ஓய்வு அறை வசதி, காத்திருக்கும் அறை, பேட்டரி கார்கள் வசதி மற்றும் ஆடை மாற்றும் அறை வசதி போன்றவற்றிற்கு இனி ஜி.எஸ்.டி வரி கிடையாது.

* கல்லூரி மாணவர்களுக்கு நிவாரணமாக, மாணவர்கள் தங்கக்கூடிய தனியார் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளித்துள்ளது.

* மார்ச் 31, 2025- க்குள் கோரப்பட்ட முழு வரியையும் செலுத்தினால், 2017- 18, 2018- 19, மற்றும் 2019- 20 நிதியாண்டுகளுக்கான சி.ஜி.எஸ்.டி சட்டத்தின் 73- ஆவது பிரிவின் கீழ், வழங்கப்பட்ட டிமாண்ட் நோட்டிஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதத்தொகையை தள்ளுபடி செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

ஜி.எஸ்.டி

* ‘ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து மூன்று மாதம் கால அவகாசம் உண்டு’ என்ற சி.ஜி.எஸ்.டி சட்டத்தின் விதிகளை மாற்றியமைப்பதற்கு ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

* எந்தவொரு விலைப்பட்டியல் மற்றும் டெபிட் நோட்டில் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit- ITC) பெறுவதற்கான நீட்டிப்பு வழங்குவதற்கு பரிந்துரைத்துள்ளது.

* அனைத்து வகையான அட்டைப்பெட்டிகளின் மீதான ஜி.எஸ்.டி வரித்தொகையை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைப்பதற்கு பரிந்துரைத்துள்ளது.

* சோலார் குக்கர்களுக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* அலுமினியம், இரும்பு, எஃகு என அனைத்து வகை பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி விதிப்பதற்கு பரிந்துரைத்துள்ளது.

* தீ அணைப்பான் மற்றும் தண்ணீர் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஒரே மாதிரியாக 12% ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என்று பரித்துரை செய்யப்பட்டுள்ளது.

* பாதுகாப்புப் படைகளுக்கான குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான ஐ.ஜி.எஸ்.டி வரி விலக்கை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது ஜூன் 30, 2029 வரை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல்

* ஜூலை 1, 2017 முதல் அங்கீகரிக்கப்பட்ட செஸ் இறக்குமதிகள் மீதான இழப்பீடுகளுக்கு வரி விலக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* “பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகள் எடுக்கப்படும் முடிவுகளில் தான் உள்ளது. அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மாநில அரசுகள் இதற்கு ஒப்புக்கொண்டால், இதற்கு எவ்வளவு விகிதம் விதிக்கலாம் என்பது குறித்து முடுவெடுக்கப்படும்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில், நிலுவையில் உள்ள சில பிரச்சனைகள், ஜி.எஸ்.டி விகிதங்களை சரிபடுத்துதல் மற்றும் 2026-ல் முடியவுள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு வரி குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார். ஆன்லைன் கேமிங், கேசினோக்கள், மற்றும் குதிரைப் பந்தயம் குறித்து அடுத்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் அது குறித்து இம்முறை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“போதிய நேரமில்லாததால் நிறைய விஷயங்கள் குறித்து எங்களால் பேச முடியவில்லை. மேலும் இப்பிரச்சனை குறித்து எந்தவொரு விவாதமும் முன்வைக்கப்படவில்லை. இதுகுறித்து அடுத்து நடைபெறவுள்ள சந்திப்பில் கண்டிப்பாக பேசுவோம்,” என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி பதிவுகளுக்கும் பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரத்தை படிப்படியாக வழங்க உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இது பதிவு செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, போலி விலைப்பட்டியல் மூலம் உள்ளீட்டு வரி வரவுகளை மோசடியிலிருந்தும் தடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.