`கள்ளக்குறிச்சி டாஸ்மாக் மூடப்பட்டதை சாராய விற்பனையாளர்கள் வாய்ப்பாக்கினர்’ – முத்தரசன் கூறுவதென்ன?

சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முத்தரசன் கூறுகையில், “நீட் மற்றும் நெட் நுழைவு தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியாகி விற்பனை ஆனது. இதனால் மத்திய அரசு பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. தோ்வு முதன்மை தலைவர் மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த மாற்றத்தால் தீர்வு ஏற்படாது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டசபை இரண்டும் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சிகளுக்கு மதிப்பு அளிக்காததோடு மரபு மீறப்பட்டது. கடந்த 5 ஆண்டு காலமாக துணை சபாநாயகர் இல்லாமலேயே நீடித்து விட்டார்கள். துணை சபாநாயகர் பதவி என்பது எதிர்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். அப்படி வழங்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே துணை சபாநாயகர் பதவி வழங்காமலேயே 5 ஆண்டு காலம் முடிந்துவிட்டது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நல்ல உறவு உள்ளது. மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே கடந்த கால தவறை சரிசெய்து கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மிகவும் துயரமானது. அதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்க முடியாது. மிகவும் கண்டனத்துக்கு உரியது. இதுவரை 55 பேர் இறந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு நோயாளியை 3 செவிலியர்கள் கவனித்து வருகிறார்கள். ஆனாலும் அதில் எத்தனை பேர் உயிரோடு திரும்புவார்கள் என்று கூற முடியாது. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. அரசு நடவடிக்கை எடுத்தாலும் உள்ளூர் போலீஸார் மாமூல் பெற்றுக் கொண்டு சாராயம் காய்ச்சவும், விற்கவும் உடந்தையாக இருப்பதால் இப்படிப்பட்ட விபரீதம் ஏற்பட்டுள்ளது.

எனவே காவல் துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றில் உள்ள கருப்பு ஆடுகளைகளை கண்டறிந்து அரசு நடவடிக்க எடுக்க வேண்டும். அரசு சார்பில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து 24-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து எங்களது சட்டசபை குழு தலைவர் ராமசந்திரன் மற்றும் பல கட்சிகளை சேர்ந்த கட்சித் தலைவர்கள் விவாவதித்து முதல் அமைச்சர் பதில் அளித்துள்ளார். விவாதிப்பதற்கு பதிலாக சட்டசபை நடைமுறைகளை மீறி செயல்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வது சரியான ஜனநாயக செயல் அல்ல. மானிய கோரிக்கை விவாதம் நடக்கும்போது எதிர்க்கட்சி பங்களிப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. எதிர்க்கட்சி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

மீனவர்களோ மற்றவர்களோ இறந்தால் 2 அல்லது 3 லட்சம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டார்கள் அதற்கு மாற்றாக கள் இறக்க அனுமதி கேட்பது மாற்று ஆகாது. ஒரு புறம் பூரண மதுவிலக்கு கோரிக்கை. மற்றொரு புறம் கள் இறக்க கோரிக்கை. ஆனால் இதெல்லாம் தீர்வு ஆகாது.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

மக்கள் மத்தியில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. அப்படி குறைக்கப்பட்ட கடைகளில் கள்ளக்குறிச்சியில் இருந்த கடையும் ஒன்று. இதை தான் வாய்ப்பாக சாராய விற்பனையாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவம் நடந்தது காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில்தான். டாஸ்மாக் கடையை படிப்படியாக குறைக்கவேண்டும். விழிப்புணர்வும் மிகவும் முக்கியம் ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88