சென்னை: கார் பந்தய செலவு 8 கோடி கேட்ட பிரியா | சந்துரு அறிக்கையை கிழித்த பாஜக கவுன்சிலர் – ஹைலைட்ஸ்!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் –

குறிப்பாக, நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 40/40 வெற்றிபெற்றது குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பற்றியும் வாழ்த்து தெரிவித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருக்கையைவிட்டு எழுந்த பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், பள்ளிகளில் சாதியத் தீண்டாமையைக் களைவது தொடர்பாக முன்னாள் நீதிபதி சந்துரு, முதலமைச்சரிடம் ஒப்படைத்த அறிக்கைக்கு எதிராக மாமன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனக் கூறி அவையின் மையத்திற்கு வந்தார். அதற்கு தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, திடீரென உமா ஆனந்த் நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை கிழித்து எறிந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சக கவுன்சிலர்கள் உமா ஆனந்தை `வெளியே போம்மா…’ என்று கூறி விரட்டியடித்தனர். `நீங்க யாரும் எனக்கு சொல்லத் தேவையில்லை’ என்று கூறியபடியே அவசர அவசரமாக அவையை விட்டு வெளியேறினார் பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வி.சி.க கவுன்சிலர் அம்பேத் வளவன், காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம் மற்றுமுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் உமா ஆனந்தின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்ததுடன், `அவையின் மாண்பை குலைக்கும் விதமாக அறிக்கையை கிழித்து எறிந்த உமா ஆனந்த்தை குறைந்தது 3 மாதங்கள் அவையில் பங்கேற்கமுடியாதபடி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என வலியுறுத்தினர்.

அறிக்கையை கிழித்த உமா ஆனந்த் – சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

அதைத் தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினர். 143-வது வார்டு கவுன்சிலர் நொலம்பூர் ராஜன், வளசரவாக்கம் மண்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதேபோல 194-வது வார்டு கவுன்சிலர் விமலா கர்ணா, தனது வார்டிலுள்ள வால்மீகி தெருவில் சாலை அமைப்பதற்கு ஒரு தனிநபர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சம்மந்தப்பட்ட சாலை மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு நீர்நிலை குளம் இருந்ததாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்கக் கூடாது என தனிநபர் தடுத்துவருவதாகவும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, குண்டும் குழியுமான சாலைகள், மழைநீர் வடிகால் பணிகளில் சுணக்கம் உள்ளிட்ட குறைபாடுகளை குற்றம்சாட்டி பேசினர். அவற்றிற்கு, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பதிலளித்தனர். நாய்கள் தொல்லை தொடர்பாகப் பேசிய மேயர் பிரியா, “நாய்கடி பிரச்னை தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாய் வளர்ப்பு விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர அமைச்சரிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இறுதியாகப் பேசிய ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை வரும்காலத்தில் 300 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிய மாமன்றக் கூடம் கட்டுவதற்கு ரூ.75 கோடி ஒதுக்கி உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். தொடர்ந்து, துணைமேயர் மகேஷ்குமாரும் தி.மு.க தேர்தல் வெற்றி, சென்னை மாநகராட்சிக்கான புதிய திட்டங்கள் அறிவித்தது தொடர்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

கூட்டத்தின் இறுதியில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேயர் பிரியா நிறைவேற்றினார். குறிப்பாக, சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக, மொத்தமுள்ள 15 மண்டலத்துக்கும் தலா 5 பேர் வீதம் புதிய பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, மாநகராட்சி பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 183 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அம்மா உணவக பணியாளர்களுக்கு ரூ.300 ஆக இருந்த தினக்கூலியில் கூடுதலாக ரூ.25 உயர்த்தப்பட்டு, தினக்கூலி பணியாளர்களுக்கு இனி ரூ.325 என ஊதிய உயர்வு வழங்கியும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேயர் பிரியா – சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மிக முக்கியமாக, நிறுத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான செலவீனங்கள் குறித்தும், சாலை உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பாக்கி பணத்தை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும் எனக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. சென்னை மாநகராட்சி அறிக்கை பொருள் எண் 69-ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தில், `கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த கார் பந்தயத்துக்காக கூடுதல் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.6 கோடியைத் தாண்டி கூடுதலாக ரூ.9.65 கோடி செலவானது. கார் பந்தயம் நடத்துவதற்காக மொத்தமாக ரூ. 15.65 கோடி செலவிடப்பட்டது. இந்த கூடுதல் செலவு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை கொடுக்கவேண்டும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு ரூ.8.25 கோடியை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும்!’ என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb